குற்றவாளிகளை விடுவித்த சென்னை ஐகோர்ட்; சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சரமாரி கேள்வி
குற்றவாளிகளை விடுவித்த சென்னை ஐகோர்ட்; சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சரமாரி கேள்வி
UPDATED : நவ 14, 2024 01:52 PM
ADDED : நவ 14, 2024 01:41 PM

புதுடில்லி: 'டாக்டர் சுப்பையா கொலை வழக்கில், குற்றவாளிகளை சென்னை ஐகோர்ட் விடுவித்ததை புரிந்து கொள்ள முடியவில்லை' என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பினர்.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் நரம்பியல் டாக்டர் சுப்பையா; சென்னையில் மருத்துவராக பணிபுரிந்தார். 2013ம் ஆண்டு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருந்து வெளியே வரும் போது, அவரை கூலிப்படையினர் வெட்டிக் கொன்றனர். நிலப் பிரச்னை தொடர்பாக நடந்த இவ்வழக்கில் ஏழு பேருக்கு துாக்கு தண்டனையும், மூன்று பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து, சென்னை செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
துாக்கு தண்டனையை உறுதி செய்ய, சென்னை உயர் நீதிமன்றத்தில் போலீஸ் தரப்பும், துாக்கு தண்டனையை எதிர்த்து ஏழு பேரும், ஆயுள் தண்டனையை எதிர்த்து இருவரும் மேல்முறையீடு செய்தனர். மரண தண்டனை விதிக்கப்பட்ட 7 பேர் மற்றும் ஆயுள் தண்டனை பெற்ற 2 பேரையும் விடுவித்து சென்னை ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியது.
இது குறித்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம்கோர்ட் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. இந்த வழக்கை இன்று (நவ.,14) விசாரித்த நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். அவர்கள் கூறியதாவது:
* டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் சம்பந்தப்பட்டோரை சென்னை ஐகோர்ட் எவ்வாறு விடுவித்தது?
* பட்டப்பகலில் பயங்கரமாக நடந்த கொலை வழக்கில், சம்பந்தப்பட்ட அனைவரையும் ஐகோர்ட் விடுவித்துள்ளது. இது புரிந்து கொள்ள முடியவில்லை.
* இது போன்ற ஒரு சம்பவத்தை நாங்கள் கேள்விப்பட்டதே இல்லை.
* ஆதாரம் இருந்ததால் குற்றவாளிகளுக்கு விசாரணை நீதிமன்றம் மரண தண்டனை தந்தது.
* மனு தொடர்பாக குற்றவாளிகள் பதில் அளிக்க நோட்டீஸ் பிறப்பித்து, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர். குற்றவாளிகள் 4 வாரங்களில் பதில் அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.