ADDED : நவ 10, 2024 08:14 AM
கண்ணுார்: கேரளாவில் மதரசா பள்ளியில் மாணவருக்கு, 'அயர்ன் பாக்சால்' சூடுவைத்து கொடுமைப்படுத்திய ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
கேரளாவின் கண்ணுாரில் மதரசா எனப்படும் இஸ்லாமிய மத கல்வியை போதிக்கும் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, மலப்புறம் மாவட்டத்தின் தானுரைச் சேர்ந்த உமைர் அஸ்ரபி என்பவர் ஆசிரியராக பணியாற்றி வந்தார். சமீபத்தில் இந்த பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவர், தன் உத்தரவுக்கு கீழ்படியாமல் நடந்ததால் அஸ்ரபி ஆத்திரமடைந்தார்.
அந்த மாணவரின் உடலில் அயர்ன் பாக்சால் சூடுவைப்பது, மிளகாய் பொடி துாவி கொடுமைப்படுத்துவது உள்ளிட்ட செயல்களில் உமைர் அஸ்ரபி ஈடுபட்டார். இதில் பாதிக்கப்பட்ட அந்த மாணவர், பெற்றோரின் உதவியுடன் போலீசில் புகார் அளித்தார்.
இதையடுத்து தலைமறைவான உமைர் அஸ்ரபி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். அண்டை மாநிலங்களான தமிழகம் மற்றும் கர்நாடகாவில் அவர் பதுங்கி இருந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், தானுரில் உள்ள தன் வீட்டிற்கு மறைமுகமாக அஸ்ரபி சென்றபோது, போலீசார் கைது செய்தனர்.