மாநில கல்வி வாரியத்துடன் இணைக்காவிட்டால் மதரசாக்கள் மூடப்படும்: உத்தராகண்ட் அரசு
மாநில கல்வி வாரியத்துடன் இணைக்காவிட்டால் மதரசாக்கள் மூடப்படும்: உத்தராகண்ட் அரசு
ADDED : ஆக 19, 2025 02:05 AM

டேராடூன்: 'மதரசா வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட அல்லது பதிவு செய்யப்படாத மதரசா பள்ளிகள், அடுத்தாண்டு ஜூலை 1க்குள் மாநில கல்வி வாரியத்தில் இணைய வேண்டும். இல்லையெனில், அவை மூடப்படும்' என, உத்தராகண்ட் அரசு தெரிவித்துள்ளது.
உத்தராகண்டில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, 'மதரசா' எனப்படும் இஸ்லாமிய கல்வியை கற்றுத் தரும் பள்ளிகள் செயல்படுகின்றன. இந்த பள்ளிகள், மதரசா வாரியத்தின் கீழ் இயங்குகின்றன.
இந்நிலையில், உத்தராகண்ட் சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் மசோதா - 2025ஐ அறிமுகப்படுத்த, மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, முஸ்லிம்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த சிறுபான்மை கல்வி நிறுவன அந்தஸ்து, இனி சீக்கியர், ஜெயின், பவுத்த, கிறிஸ்துவ, பார்சி ஆகிய சமூகங்களுக்கும் வழங்கப்படும்.
முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில், சமீபத்தில் நடந்த மாநில அமைச்சரவை கூட்டத்தில், உத்தராகண்ட் சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் மசோதா - 2025க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது, உத்தராகண்டில் தற்போது நடக்கும் சட்டசபை மழைக்கால கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு கவர்னர் ஒப்புதல் அளித்தால், 2026 ஜூலை 1 முதல் அமலுக்கு வரும்.
இந்த புதிய மசோதாவின்படி, உத்தராகண்டில் மதரசா வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட அல்லது செய்யப்படாத மதரசா பள்ளிகள், மாநில கல்வி வாரியத்தில் இணைந்து, சிறுபான்மை கல்வி நிறுவன அந்தஸ்தை பெற வேண்டும். இல்லை எனில், அவை நிரந்தரமாக மூடப்பட வேண்டிய சூழல் உருவாகும்.