ADDED : ஜன 20, 2025 07:14 AM

பல துறைகளில் பெண்கள் சாதித்து வந்தாலும், இன்னும் சில துறைகளில் ஆண்களின் ஆதிக்கமே அதிகமாக உள்ளது. அப்படி, மேஜிக் என்றவுடன் நினைவுக்கு வருவது மேஜிக் மேன் தான். அப்படி என்றால், மேஜிக் துறையில் பெண்களே இல்லையா என்ற கேள்வி எழுகிறது. இந்த கேள்விக்கான விடை தான், 'மேஜிக் வுமன் திவ்யாஸ்ரீ.
பெங்களூரு, ஹனுமந்த் நகரை சேர்ந்தவர் திவ்யா ஸ்ரீ, 24. இவரது தந்தை சிம்ப்ளி சுரேஷ், 46; ஒரு மேஜிக் மேன். திவ்யா ஸ்ரீ குழந்தையாக இருக்கும் போதே, தனது தந்தையின் மேஜிக் செய்யும் திறமையை பார்த்து வியந்து உள்ளார். இதானல், மேஜிக்கை கற்கும் ஆர்வம் இவருக்கு வந்து உள்ளது. தந்தையிடம் மேஜிக் செய்வதற்கு பயிற்சிகள் எடுக்க ஆரம்பித்து உள்ளார்.
ஆரம்பத்தில் கற்று கொள்வதற்கு கஷ்டப்பட்டாலும், நாட்கள் செல்ல செல்ல சுலபமாக கற்று கொண்டார். இவர் 4ம் வகுப்பு படிக்கும் போது முதன் முதலில், பள்ளியில் மேஜிக் செய்து காட்டி உள்ளார். இதை பார்த்த அவரது ஆசிரியர்கள், சக மாணவர்கள் என அனைவரும் வியந்து உள்ளனர். பலரும் பாராட்டுவதை பார்த்த போது, அவருக்கு இன்னும் நிறைய கற்று கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாகி உள்ளது. இதன் காரணமாக மேலும் பயிற்சிகள் செய்து உள்ளார்.
பத்தாம் வகுப்பு படிக்கும் போது, ஆசிரியர் தின விழாவின் போது, அனைவரின் முன்னிலையிலும் தனது மேஜிக் திறமையை செய்து அசத்தி உள்ளார். இது, பிற்காலத்தில் இவரது வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவாக மாறி உள்ளது. பள்ளி பருவத்தில் விளையாட்டாக செய்த மேஜிக்கை, கல்லுாரி படிக்கும் போது வீரியமாக செய்து உள்ளார்.
கடந்த 2019 ம் ஆண்டு, கர்நாடகா அளவில் கல்லுாரி பயிலும் மாணவியரின் திறமையை வெளிகாட்டும் விதமாக பெங்களூரில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நடனம், பாடல், இசை என பல விதமான திறமைகளை கொண்டவர்கள் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற திவ்யா ஸ்ரீ சிறப்பாக மேஜிக் செய்து அசத்தி உள்ளார்.
இவர் மேடையில் மேஜிக் செய்யும் போது, மற்றவர்கள் போன்று இல்லாமல், நிகழ்ச்சிக்கு வரும் பார்வையாளர்களிடம் உரையாடி கொண்டே மேஜிக் செய்து காட்டி உள்ளார். இதனால், இவர் அந்த போட்டியில் வெற்றி பெற்று, 20 கிராம் தங்க காசை பரிசாக பெற்றார். இதன் மூலம் இவரது பெயர் பட்டி தொட்டி வரை பிரபலமாகி உள்ளது.
பொறியியல் பட்டதாரியான திவ்யா ஸ்ரீ தற்போது, 'மைன்ட் ரீடிங்' எனும் மற்றவர்கள் மனதில் நினைப்பதை சொல்லும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதன் மூலம் மேஜிக் உலகில் அடுத்த கட்டத்திற்கு செல்ல முயற்சிகள் செய்து வருகிறார். இவரது வெற்றி பயணத்திற்கு பின், இவரது தந்தையின் பங்கு முக்கியமானது என மகிழ்ச்சியாக கூறுகிறார்.