மஹா., சட்டசபை தேர்தல்: காங்., மீது உத்தவ் தாக்கரே அதிருப்தி!
மஹா., சட்டசபை தேர்தல்: காங்., மீது உத்தவ் தாக்கரே அதிருப்தி!
UPDATED : அக் 18, 2024 10:37 PM
ADDED : அக் 18, 2024 10:34 PM

மும்பை: மஹாராஷ்டிர சட்டசபை தேர்தலில், தொகுதி பங்கீடு தொடர்பாக காங்., மாநில தலைவர் நானா படோலுடன் பேச மாட்டோம் என உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கூறியுள்ளது.
288 தொகுதிகள் கொண்ட மஹாராஷ்டிரா சட்டசபைக்கு ஒரே கட்டமாக நவ.,20 ல் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் எதிர்க்கட்சிகளான உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் அடங்கிய கட்சிகள் அம்மாநிலத்தில் மஹா விகாஸ் அகாதி என்ற பெயரில் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. அதில் 260 தொகுதிகளில் யார் போட்டியிடுவது என்பதில் கூட்டணி கட்சிகள் இடையே ஒரு மித்த முடிவு ஏற்பட்டு உள்ளதாக தேசியவாத காங்கிரஸ் கூறியுள்ளது.
இந்நிலையில், சிவசேனா எம்.பி., சஞ்சய் ராவத் கூறுகையில், 200 தொகுதிகளில் மட்டும் தான் ஒரு மித்த முடிவு ஏற்பட்டு உள்ளதாக கூறினார். மேலும், மஹா., மாநில காங்., தலைவர் நானா படோல் முடிவு எடுக்க திறமை இல்லாதவர் என விமர்சித்து உள்ளார்.
அவர் மேலும் கூறியதாக செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், நிலுவையில் உள்ள தொகுதிகளுக்கு விரைவில் முடிவு எடுக்கப்பட வேண்டும். காலம் குறைவாகத்தான் உள்ளது. முடிவு எடுக்க மஹா., மாநில காங்., தலைவர்களிடம் திறமை இல்லை. அவர்கள் தொடர்ச்சியாக டில்லிக்கு பட்டியல் அனுப்புகின்றனர்.பிறகு, தான் ஆலோசனை நடக்கிறது. விரைவில் முடிவு எடுக்கப்பட வேண்டியது முக்கியம் என சஞ்சய் ராவத் கூறியதாக அந்த செய்தியில் கூறப்பட்டு உள்ளது.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால், முகுல் வாஸ்னிக், ரமேஷ் சென்னிதாலா ஆகியோருடனும் அவர் தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தி உள்ளார்.
மஹா., சட்டசபை தேர்தலில் உத்தவ் தாக்கரே தரப்பு அதிக தொகுதிகளில் போட்டியிட விரும்புவதாகவும், அதற்கு நானா படோல் ஒத்துக்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், காங்., மீது உத்தவ் தாக்கரே தரப்பினர் அதிருப்தியில் இருக்கின்றனர். இப்பிரச்னையை தீர்க்க காங்.,கின் ரமேஷ் சென்னிதாலா, விரைவில் உத்தவ் தாக்கரேவை சந்திப்பார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.