UPDATED : ஆக 06, 2026 10:35 PM
ADDED : ஆக 06, 2026 06:51 PM
மும்பை: 'மஹாராஷ்டிராவில் ஹோமியோபதி டாக்டர்கள், அலோபதி மருந்துகளை பரிந்துரைக்கலாம் என்ற மாநில அரசின் முடிவுக்கு எதிராக காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள் போராட்டத்தை உடனடியாக கைவிடும்படி மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
'மஹாராஷ்டிராவில், ஆறு மாத நவீன மருந்தியல் சான்றிதழ் படிப்பை முடித்த ஹோமியோபதி டாக்டர்கள், மஹாராஷ்டிரா மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்து, அலோபதி மருந்துகளை பரிந்துரைக்கலாம்' என, மாநில அரசு சமீபத்தில் அனுமதி அளித்தது.
இதற்கு மாநிலம் முழுதும் எம்.பி.பி.எஸ்., முடித்த டாக்டர்கள், ஆகஸ்ட் 5 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இந்த விவகாரத்தை மும்பை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது.
நேற்று நடந்த விசாரணையின் போது, 'ஆயிரக்கணக்கான நோயாளிகள் மற்றும் மாநில மக்களின் உடல்நலம் குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம். எனவே, டாக்டர்கள், தங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை உடனடியாக கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும்' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
