மஹா., தேர்தல் முடிவு எதிர்பாராதது: ராகுல், கார்கே கருத்து
மஹா., தேர்தல் முடிவு எதிர்பாராதது: ராகுல், கார்கே கருத்து
ADDED : நவ 23, 2024 06:44 PM

புதுடில்லி: '' மஹாராஷ்டிரா மாநில தேர்தல் முடிவு எதிர்பாராதது,'' என காங்கிரஸ் தலைவர் கார்கே மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் ஆகியோர் கருத்து தெரிவித்து உள்ளனர்.
மஹாராஷ்டிராவில் பா.ஜ., கூட்டணி ஆட்சியை தக்க வைத்து கொண்டுள்ளது.அதேபோல் ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கிறது. ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராக உள்ளார்.
இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: 'இண்டியா' கூட்டணிக்கு அமோக ஆதரவு அளித்த ஜார்க்கண்ட் மக்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றிக்காக முதல்வர் சோரன், காங்கிரஸ், ஜேஎம்எம் தொண்டர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். கூட்டணிக்கு கிடைத்த வெற்றியானது, மாநிலத்தின் வெற்றி. வனம், நீர், நிலம் மற்றும் அரசியல்சாசனத்திற்கு கிடைத்த வெற்றி.
மஹாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் எதிர்பாராதது. அதற்கான காரணத்தை விரிவாக ஆராய்வோம். எங்களுக்கு ஆதரவு அளித்த சகோதரர், சகோதரிகளுக்கும், கடுமையாக உழைத்த கட்சி நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
வயநாடு
பிரியங்கா மீது நம்பிக்கை வைத்த எனது வயநாடு குடும்பத்தை நினைத்து பெருமை கொள்கிறேன். பெருமை மிக்க வயநாட்டை வளர்ச்சியடைந்த பகுதியாக மாற்ற தைரியம், நம்பிக்கை மற்றும் அர்ப்பணிப்புடன் பிரியங்கா உழைப்பார் .
காரணம் தெரிகிறது
கார்கே வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மஹாராஷ்டிரா தேர்தல் முடிவு எதிர்பாராதது. தோல்விக்கான காரணங்களை புரிந்து கொள்ள முடிகிறது. எங்கள் கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். சத்ரபதி சிவாஜி, அம்பேத்கர் ஆகியோரின் கொள்கையின் உண்மையான பிரதிநிதிகள் நாங்கள் தான். மக்களின் பிரச்னையை தொடர்ந்து எழுப்புவோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கார்கே கூறியுள்ளார்.

