மஹா., முன்னாள் முதல்வர் காங்கிரசில் இருந்து விலகல்
மஹா., முன்னாள் முதல்வர் காங்கிரசில் இருந்து விலகல்
ADDED : பிப் 13, 2024 01:13 AM

மும்பை,மஹாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் அசோக் சவான் காங்கிரசில் இருந்து நேற்று விலகினார்.
மஹாராஷ்டிராவின் மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராக இருந்தவர் அசோக் சவான்.
அம்மாநில முன்னாள் முதல்வர் சங்கர் ராவ் சவானின் மகனான இவர், மஹாராஷ்டிராவின் அமைச்சராகவும், இரண்டு முறை முதல்வராகவும் பதவி வகித்துஉள்ளார்.
3 எம்.எல்.ஏ.,க்கள்
தற்போது எம்.எல்.ஏ., வாக உள்ள அசோக் சவான், காங்கிரசில் இருந்து நேற்று விலகினார்.
தன் ராஜினாமா கடிதத்தை மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலிக்கு அவர் அனுப்பியுள்ளார். முன்னதாக சபாநாயகர் ராகுல் நர்வேகரை சந்தித்து, இது தொடர்பாக அசோக் சவான் பேசிய நிலையில், தற்போது காங்.,கில் இருந்து விலகியுள்ளார்.
அவருடன் சேர்ந்து மேலும் மூன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களும் விலக உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, அசோக் சவான் பா.ஜ.,வில் சேர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து அசோக் சவான் கூறுகையில், ''எம்.எல்.ஏ., உட்பட காங்கிரசின் அனைத்து பொறுப்புகளில் இருந்து ராஜினாமா செய்து விட்டேன். அடுத்த கட்ட முடிவு குறித்து விரைவில் அறிவிப்பேன்,'' என்றார்.
இது குறித்து மஹா., துணை முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் கூறுகையில், ''எதிர்க்கட்சியைச் சேர்ந்த பலர் பா.ஜ.,வில் இணைய உள்ளனர். காங்கிரசில் உள்ள பலர் எங்களுடன் தொடர்பில் உள்ளனர்,'' என்றார்.
பின்னடைவு
அடுத்த சில மாதங்களில் லோக்சபா தேர்தலும், அக்டோபருக்குள் சட்டசபை தேர்தலும் நடக்க உள்ள நிலையில், அசோக் சவானின் விலகல் காங்கிரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
அக்கட்சியைச் சேர்ந்த மிலிந்த் தியோரா சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியிலும், பாபா சித்திக்கி, அஜித் பவாரின் கட்சியிலும் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து காங்., பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ''இதுபோன்ற துரோகிகள் வெளியேறுவதால், கட்சியில் புதியவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். இதை அவர்கள் உணரவில்லை'' என, தெரிவித்துள்ளார்.