ADDED : அக் 19, 2024 12:34 AM

உஜ்ஜைன்: மஹாராஷ்டிராவில் உள்ள மஹா காலேஸ்வர் கோவில் கருவறைக்குள், அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் மகன் ஸ்ரீகாந்த், தடையை மீறி நுழைந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மஹாராஷ்டிராவின் உஜ்ஜைனில் புகழ்பெற்ற மஹா காலேஸ்வர் சிவன் கோவில் அமைந்துள்ளது.
நாட்டில் உள்ள 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றான இங்கு, உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஏராளமானோர் வந்து வழிபட்டு செல்கின்றனர்.
பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சிவனை வழிபட அனுமதிக்கப்படுகிறது. அதேசமயம், கோவில் கருவறைக்குள் வி.ஐ.பி.,க்கள் உட்பட யாரும் செல்ல அனுமதி இல்லை.
இந்நிலையில், நேற்று முன்தினம் மஹா காலேஸ்வர் கோவிலுக்கு, மஹாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் மகன் ஸ்ரீகாந்த், தன் மனைவி மற்றும் இரு நண்பர்களுடன் சென்றார்.
அவர், கோவில் கருவறைக்குள் சென்று சிவனை வழிபடும் வீடியோ சமூக வலைதளங்களில் நேற்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வி.ஐ.பி.,க்களுக்கு கருவறைக்குள் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், ஸ்ரீகாந்த் தன் நண்பர்களுடன் சென்று வழிபட்டது எப்படி என, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின.
இது குறித்து கோவில் கமிட்டி தலைவரும், உஜ்ஜைன் கலெக்டருமான நீரஜ் குமார் சிங் கூறுகையில், “கோவில் கருவறைக்குள் யாரும் நுழைய அனுமதியில்லை. ஸ்ரீகாந்த் மற்றும் அவருடன் சென்றவர்கள் உரிய அனுமதியின்றி கருவறைக்குள் சென்றுள்ளது தெரிய வந்துள்ளது.
''இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க, கோவில் நிர்வாக அதிகாரிக்கு உத்தரவிட்டு உள்ளேன்,” என்றார்.

