ADDED : மார் 02, 2025 04:03 AM

உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெற்ற மஹா கும்பமேளா முடிந்துவிட்டது. கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் ஒன்றாக இணையும், திரிவேணி சங்கமத்தில், 66 கோடி பக்தர்கள் நீராடி உள்ளனர். பணக்காரர், ஏழை, வி.ஐ.பி.,க்கள் என, எந்த பாகுபாடும் இல்லாமல் கும்பமேளாவில் பங்கேற்றனர்.
கடந்தாண்டு, அயோத்தியில் ராமர் பிரதிஷ்டை, இந்த ஆண்டு மகா கும்பமேளா என உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்தும், பிரதமர் நரேந்திர மோடியும் பா.ஜ.,வின் குறிக்கோள் என்ன என்பதை தெளிவாக சொல்லி விட்டனர்.
கும்பமேளாவால், உ.பி.,க்கு பெரும் பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. டீ விற்பவர்கள் ஒரு நாளைக்கு 5,000 ரூபாய், பற்பொடி மற்றும் வேப்பங்குச்சி விற்போர் 40,000 ரூபாய் என, சிறு வியாபாரிகளுக்கு கும்பமேளா ஒரு வரப்பிரசாதம். மிகப்பெரிய நிறுவனங்களும் பெரும் உதவி செய்துள்ளன.
சுகாதார பணியாளர்களுக்கு 'கோகோ கோலா' நிறுவனம் 21,000 லைப் ஜாக்கெட்டும், 'மேன்கைண்ட்' பார்மா நிறுவனம் மருத்துவக் குடில்களும் அமைத்து கொடுத்தது. 'சைரன்' ஒலி எழுப்பும் 5,000 டார்ச் லைட்டுகளை உ.பி., போலீசாருக்கு, 'எவரெடி' நிறுவனம் வழங்கி உள்ளது.
காங்கிரசிலிருந்து, கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் மற்றும் ராஜ்யசபா எம்.பி.,யும், மூத்த வழக்கறிஞருமான, அபிஷேக் மனு சிங்வி மட்டுமே பங்கேற்றனர். சோனியா குடும்பத்திலிருந்து யாரும் வரவில்லை. 'டில்லி தேர்தல் முடிந்த உடன் திரிவேணி சங்கமத்திற்கு வருவேன்' எனக் கூறிய ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால், தோல்விக்குப் பின் கும்பமேளாவிற்கு வரவில்லை.
'இந்த விவகாரம் விரைவில் அரசியலில் எதிரொலிக்கும். ஏற்கனவே வட மாநிலங்களில், காங்கிரஸ் தொடர் தோல்வியைச் சந்தித்து வரும் நிலையில், கும்பமேளா விஷயத்தை யோகி ஆதித்யநாத் சுட்டிக்காட்டி காங்கிரசை வறுத்தெடுப்பார்' என்கின்றனர் பா.ஜ.,வினர்.