மஹா கும்பமேளா நெரிசல் பலி: பார்லி.,யில் விவாதிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
மஹா கும்பமேளா நெரிசல் பலி: பார்லி.,யில் விவாதிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
ADDED : ஜன 30, 2025 10:49 PM

புதுடில்லி : உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடக்கும் மஹா கும்பமேளாவில் கூட்ட நெரிசலில், 30 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடரில் விவாதிக்க வேண்டும் என, அனைத்துக் கட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துவங்குகிறது. முதல் நாளான இன்று, கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதிதிரவுபதி முர்மு உரையாற்றுகிறார்.
வரும் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை தாக்கல் செய்ய உள்ளார்.
இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு கட்டங்களாக நடக்க உள்ளது. முதற்கட்டம், பிப்., 13ல் முடிகிறது.
மார்ச் 10ல் துவங்கும் இரண்டாம் கட்ட கூட்டத்தொடர், ஏப்., 4 வரை நடக்க உள்ளது. இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக, அனைத்துக் கட்சி கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது.
ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ் உட்பட பல கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.
உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடக்கும் மஹா கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி, 30 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, பட்ஜெட் கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டும் என்று காங்., தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இதுபோல், பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என, எதிர்க்கட்சிகள் பட்டியலிட்டன.
பட்ஜெட் கூட்டத் தொடரில் விவாதிக்கப்பட உள்ளவை தொடர்பாக அலுவல் ஆய்வுக்குழு முடிவு செய்யும். அதில் பிரயாக்ராஜ் சம்பவமும் இடம்பெற்றுள்ளது என, பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.