மஹா., முதல்வர் தேர்வில் கூட்டணிக்குள்... சமரசம் மோடிக்கு கட்டுப்படுவதாக ஷிண்டே உறுதி
மஹா., முதல்வர் தேர்வில் கூட்டணிக்குள்... சமரசம் மோடிக்கு கட்டுப்படுவதாக ஷிண்டே உறுதி
UPDATED : நவ 28, 2024 04:05 AM
ADDED : நவ 28, 2024 12:45 AM

தானே, ''மஹாராஷ்டிரா முதல்வர் விவகாரத்தில், பிரதமர் நரேந்திர மோடி என்ன முடிவு எடுத்தாலும் கட்டுப்படுவேன். புதிய அரசு அமைவதில் நான் தடையாக இருக்க மாட்டேன்,'' என, அம்மாநில காபந்து முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உருக்கமாக தெரிவித்தார்.
மஹாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், ஆளும் பா.ஜ., - சிவசேனா - அஜித் பவாரின் தேசியவாத காங்., அடங்கிய 'மஹாயுதி' கூட்டணி, மொத்தமுள்ள 288 தொகுதிகளில், 230ல் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது.
காங்., - உத்தவ் தாக்கரேயின் சிவசேனா - சரத் பவாரின் தேசியவாத காங்., அடங்கிய 'மஹா விகாஸ் அகாடி' கூட்டணி, வெறும் 46 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி, எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெறவில்லை.
ஆட்சி அமைக்க, 145 தொகுதிகள் தேவை என்ற நிலையில், 132 தொகுதிகளுடன் தனிப்பெரும் கட்சியாக பா.ஜ., உருவெடுத்துள்ளது. ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா, 57; தேசியவாத காங்., 41 இடங்களையும் கைப்பற்றின.
அதிக தொகுதிகளில் வென்றுள்ளதால், முதல்வர் பதவியை பா.ஜ.,வுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மஹாயுதி கூட்டணியில் எழுந்துள்ளது.
இதற்கு அஜித் பவார் சம்மதம் தெரிவித்த நிலையில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பிடிவாதமாக இருப்பதாக தகவல் வெளியானது.
காபந்து முதல்வர்
இது தொடர்பாக, கடந்த சில நாட்களாக மஹாயுதி கூட்டணி கட்சிகளிடையே பேச்சு நடந்து வருகிறது.
இதற்கிடையே, முதல்வர் பதவியை ஏக்நாத் ஷிண்டே நேற்று முன்தினம் ராஜினாமா செய்தார். தற்போது அவர் காபந்து முதல்வராக தொடர்கிறார்.
தேவேந்திர பட்னவிஸ் முதல்வராவதற்கு ஏக்நாத் ஷிண்டே ஆதரவு தரவில்லை என்றால், அஜித் பவார் ஆதரவுடன் புதிய அரசு அமைக்க, பா.ஜ., மேலிடம் ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில், தானே மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் காபந்து முதல்வர் ஏக்நாத் ஷிண்டே நேற்று கூறியதாவது:
முதல்வர் பதவி விவகாரத்தில் நான் அதிருப்தியில் இருப்பதாக வெளியான தகவல் முற்றிலும் வதந்தி. நான் எப்போதுமே ஒரு சாதாரண தொண்டன். என்னை பொறுத்தவரை, சி.எம்., என்றால், 'காமன் மேன்'. சாமானியர் தான்.
இதை அடிப்படையாக வைத்தே, மக்களின் நலனுக்காக பணியாற்றினேன். தேர்தலில் மஹாயுதி கூட்டணியாகவே போட்டியிட்டோம். கூட்டணிக்கு மக்கள் ஓட்டளித்து வெற்றி பெற செய்துள்ளனர். இது வரலாற்று வெற்றி.
மஹாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் குறித்து, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரிடம் சமீபத்தில் பேசினேன். அப்போது, நீங்கள் இருவரும் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன் என, அவர்களிடம் உறுதி அளித்தேன்.
மேலும், புதிய அரசு அமைவதில் என்னால் எந்தப் பிரச்னையும் இருக்காது என்றும், அதற்கு ஒருபோதும் தடையாக இருக்க மாட்டேன் என்றும் பிரதமர் மோடியிடம் உறுதிப்பட தெரிவித்து விட்டேன்.
முழு ஒத்துழைப்பு
மோடி எங்கள் குடும்பத்தின் தலைவர். அவரது முடிவை பா.ஜ.,வினர் எப்படி ஏற்றுக் கொள்கின்றனரோ அப்படியே நாங்களும் ஏற்றுக்கொள்வோம். மஹாயுதி கூட்டணியில், முதல்வராக யார் தேர்வு செய்யப்பட்டாலும், அதற்கு சிவசேனா முழு ஒத்துழைப்பு அளிக்கும்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில், டில்லியில் இன்று, மஹாயுதி கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. இதில் முதல்வர், துணை முதல்வர்கள் தொடர்பாக முடிவு எடுக்கப்படும். உங்களது அனைத்து கேள்விகளுக்கும் இன்று விடை தெரிந்து விடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஏக்நாத் ஷிண்டே இந்த பேட்டியின் வாயிலாக, முதல்வராக தேவேந்திர பட்னவிசை ஆதரிப்பதாக மறைமுகமாக தெரிவித்துள்ளார்.
டில்லியில் இன்று நடக்கும் கூட்டத்தில், முதல்வராக தேவேந்திர பட்னவிஸ், துணை முதல்வர்களாக ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் ஆகியோர் தேர்வு செய்யப்படுவர் எனக் கூறப்படுகிறது.