மஹா., அரசியலில் காத்திருக்கும் ஆச்சரியங்கள்; முதல்வர் பதவிக்கு அனைத்து கட்சிகளும் முயற்சி
மஹா., அரசியலில் காத்திருக்கும் ஆச்சரியங்கள்; முதல்வர் பதவிக்கு அனைத்து கட்சிகளும் முயற்சி
ADDED : நவ 17, 2024 04:45 AM

மஹாராஷ்டிரா சட்டசபைக்கு நடக்கும் தேர்தலில், எந்த கூட்டணி வெற்றி பெறும் என்பதில் ஒரு தெளிவு ஏற்படவில்லை. இந்நிலையில், இரண்டு கூட்டணிகளில் உள்ள அனைத்துக் கட்சிகளுமே முதல்வர் பதவிக்கு ஆசைப்படுகின்றன. இதனால், தேர்தலுக்குப் பின், மஹாராஷ்டிரா அரசியலில் மிகப்பெரிய சடுகுடு ஆட்டம் நடக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
மஹாராஷ்டிராவில் தற்போது முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, பா.ஜ., மற்றும் அஜித் பவாரின் தேசியவாத காங்., ஆகியவை அடங்கிய, மஹாயுதி கூட்டணி ஆட்சி நடக்கிறது.
அதே நேரத்தில், காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்., பிரிவு, உத்தவ் தாக்கரேவின் சிவசேனா பிரிவு ஆகியவை, மஹா விகாஸ் அகாடி கூட்டணியில் இடம்பெற்றுள்ளன.
வாய்ப்பு
மாநில சட்டசபையின், 288 தொகுதிகளுக்கும், 20ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. வரும் 23ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளது.
அனைத்து கருத்து கணிப்புகளும், எந்தக் கூட்டணிக்கு வெற்றி கிடைக்கும் என்பதை உறுதியாக தெரிவிக்கவில்லை. இதனால், குழப்பமான சூழ்நிலையே உள்ளது.
இந்த நிலையில், இரண்டு கூட்டணியில் உள்ள ஆறு கட்சிகளும் முதல்வர் பதவிக்கு ஆசைப்படுகின்றன. இதனால், கூட்டணிகளுக்கு இடையேயும், உள்ளேயும் கடுமையான போட்டி நிலவுகிறது.
கடந்த 2019 தேர்தலுக்குப் பின் ஏற்பட்ட கூட்டணி மாற்ற காட்சிகள், தற்போது ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அந்த தேர்தலில், பா.ஜ., மற்றும் சிவசேனா கூட்டணி அமைத்து போட்டியிட்டன.
தேர்தலில் இந்தக் கூட்டணியே வென்றது. ஆனாலும், முதல்வர் பதவி கேட்டு, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே போர்க்கொடி துாக்கினார். அதிக இடங்களில் வென்ற பா.ஜ., இதற்கு மசியவில்லை.
இதனால், ஆட்சி அமைப்பதில் குழப்பம் ஏற்பட்டது. இதற்கிடையே, காங்கிரசுடன் இணைந்து, உத்தவ் தாக்கரேவுக்கு ஆதரவு அளிப்பதாக தேசியவாத காங்., தலைவர் சரத் பவார் அறிவித்தார்.
இதுவே, மஹா விகாஸ் அகாடி கூட்டணி உருவாவதற்கு காரணமானது. அந்தக் கூட்டணி ஆட்சியையும் பிடித்தது.
கடந்த, 2022ல் சிவசேனாவில் பிளவு ஏற்பட்டு, ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரசிலும் பிளவு ஏற்பட்டது.
ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா மற்றும் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்., ஆகியவற்றுக்கு தேர்தல் கமிஷன் அங்கீகாரமும் அளித்தது.
பா.ஜ., மற்றும் இந்த இரண்டு கட்சிகள் தங்களுடைய கூட்டணிக்கு 'மஹாயுதி' என்று பெயிரிட்டன.
தற்போது இரண்டு கூட்டணிகளிலும் பிளவுபட்ட கட்சிகள் உள்ளன. வரும் தேர்தலுக்குப் பின், இந்த பிளவுபட்ட கட்சிகள் மீண்டும் ஒன்று சேர்வதற்கான வாய்ப்புகளும் இருப்பதாக கூறப்படுகிறது.
தேர்தல் முடிவு
அரசியலில் எதுவும் சாத்தியம் என்பதால், சரத் பவார் - அஜித் பவார், ஏக்நாத் ஷிண்டே - உத்தவ் தாக்கரே மீண்டும் இணைவதற்கு, இந்தத் தேர்தல் முடிவுகள் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதுபோல, இரு கூட்டணியில் உள்ள கட்சிகள், மாற்று கூட்டணிக்கு மாறுவதற்கான வாய்ப்பும் இருப்பதாக கூறப்படுகிறது.
தற்போதைய சூழ்நிலையில், இரண்டு கூட்டணியில் உள்ள, ஆறு கட்சிகளும் முதல்வர் பதவிக்கு குறிவைத்துள்ளன. தேர்தலுக்குப் பின், அதிக தொகுதிகளில் வெல்லும் கட்சியே ஆட்சி அமைக்கும் என, இரண்டு கூட்டணியிலும் பேசப்படுகிறது.
- நமது சிறப்பு நிருபர் -