ADDED : நவ 24, 2024 11:29 PM

மும்பை: “மஹாராஷ்டிராவில் கட்சி மாறிய அரசியல்வாதிகளுக்கு, சட்டம் குறித்த பயத்தை முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் ஏற்படுத்தியிருந்தால், இங்கு அரசியல் களமே மாறியிருக்கும்,'' என, உத்தவ் தாக்கரே சிவசேனாவின் எம்.பி., சஞ்சய் ராவத் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில், பா.ஜ., தலைமையிலான மஹாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. 'இண்டி' கூட்டணிக்கு, 50 இடங்கள் மட்டுமே கிடைத்தன.
இந்த தோல்வி குறித்து, சிவசேனா உத்தவ் தாக்கரே கட்சி எம்.பி., சஞ்சய் ராவத் நேற்று கூறியதாவது:
மஹாராஷ்டிராவில் கட்சி தாவும் அரசியல்வாதிகளுக்கு சிறிதும் பய உணர்வே ஏற்படாத சூழ்நிலையை உருவாக்கியவர் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்.
சிவசேனா தாக்கல் செய்த எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் தகுதிநீக்க வழக்கில் அவர் எந்த முடிவும் எடுக்கவில்லை.
இதனால்தான் கட்சி தாவிய அரசியல்வாதிகளுக்கு துணிச்சல் வந்துவிட்டது. இந்திய அரசியல் வரலாற்றில் டி.ஒய். சந்திரசூட் பெயர், கருப்பு எழுத்துகளால் எழுதப்பட வேண்டும்.
சிவசேனாவை விட்டு ஓடிப்போனவர்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கை அவர் உரிய நேரத்தில் விசாரித்திருந்தால் மஹாராஷ்டிராவின் அரசியல் களமே வேறு மாதிரியாக இருந்திருக்கும்.
மஹாராஷ்டிராவின் முதல்வர் யார் என்பதை குஜராத் லாபிதான் இன்று முடிவு செய்கிறது. எனவே, முதல்வர் பதவியேற்பு விழாவை குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டு மைதானத்தில் நடத்தலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.