வள்ளலார் எழுப்பிய குரல்; வள்ளுவர் எழுதிய குறள்; மகா விஷ்ணுவுக்கு வலுக்கிறது ஆதரவுக்குரல்!
வள்ளலார் எழுப்பிய குரல்; வள்ளுவர் எழுதிய குறள்; மகா விஷ்ணுவுக்கு வலுக்கிறது ஆதரவுக்குரல்!
UPDATED : செப் 08, 2024 12:05 PM
ADDED : செப் 08, 2024 11:56 AM

சென்னை: வள்ளலார், திருவள்ளுவர் கூறியதைத் தான் மகா விஷ்ணு கூறியிருப்பதாகவும், அவர் சொந்தமாக எந்தக் கருத்தையும் கூறவில்லை என்று அவரது ஆதரவாளர்கள் கைது நடவடிக்கைக்கு எதிராக கருத்துக்களை கூறி வருகின்றனர்.
சென்னை அசோக் நகர் அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சொற்பொழிவாற்றிய பரம்பொருள் அறக்கட்டளையின் தலைவர் மகா விஷ்ணு, சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியதாக போலீசார் கைது செய்தனர். அவர் மீது 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நேற்று சென்னை விமான நிலையத்தில் வைத்து மகா விஷ்ணுவை கைது செய்த போலீசார், அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்தனர். அப்போது, தன்னை சித்தர்கள் வழிநடத்துவதாகவும், அவர்கள் தன்னிடம் பேசியதை வைத்து தான், நிகழ்ச்சிகளில் பேசி வருவதாக போலீசாரிடம் மகா விஷ்ணு வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தப்பில்லை
இதனிடையே, சென்னை விமான நிலையத்திற்கு மகா விஷ்ணுவை சந்திக்க வந்த ஜனனி எனும் ஆதரவாளர் கூறியதாவது: நல்லா அட்வைஸ் கொடுப்பார். அவரது கைது அதிர்ச்சியளிக்கிறது. நல்ல விஷயங்களை சொல்லி கொடுப்பார். அந்த வீடியோவை பார்த்துள்ளேன். அவர் ஏதும் தவறாக பேசவில்லை. அவருடைய கருத்தை அவர் சொல்லியிருக்கிறார். பள்ளிகள் தான் அவரை அழைத்துள்ளன. அதுவும், தலைமை ஆசிரியர்களிடம் கலந்துரையாடிய பிறகே, மாணவர்கள் மத்தியில் அவர் பேசியுள்ளர். அதுவும் ஆன்மிகம் பற்றி மட்டும் தான் பேசினார்.
வெறுப்பு
மகா விஷ்ணு பேச்சுக்கு அந்த ஒரு ஆசிரியர் மட்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். வேறு யாரும் அங்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஒருவேளை, சொந்த வெறுப்பு காரணமாக, அந்த ஆசிரியர் எதிர்ப்பு தெரிவித்திருக்கலாம்.
திருக்குறளின் கருத்து
3 அல்லது 4 ஆண்டுகளாக அவரது பேச்சை நான் கேட்டு வருகிறேன். அனைத்து வயதினருக்கும் புரியும் வகையில் தனது கருத்துக்களை தெளிவாக பேசக் கூடியவர். அவரது பேச்சுக்கள் அறிவியல் பூர்வமாக இல்லை என்று கூறி விட முடியாது. அதில் எந்த வித்தியாசமும் எனக்கு தெரியவில்லை. வள்ளலார், திருக்குறள் கூறியதைத் தான் மகா விஷ்ணு கூறியிருக்கிறார். அவர் சொந்தமாக எந்தக் கருத்தையும் கூறவில்லை, எனக் கூறினார்.
ஊக்கமளிக்கும் பேச்சு
அதேபோல, விருகம்பாக்கத்தைச் சேர்ந்த குகன் என்பவர் கூறுகையில், '8 ஆண்டுகளாக குருஜி மகாவிஷ்ணுவை தெரியும். சித்தரின் கருத்தியல், அவர்களின் வாழ்க்கை முறைகளை மக்களிடம் கொண்டு செல்வது தான் அவரது பணி. அவர் பேசிய வார்த்தை அனைவரையும் வருத்தத்திற்குள்ளாக்கியது தான், ஆனால், அது அவருடைய கருத்து கிடையாது. திருவள்ளுவர் சொன்னதையும், திருவருட்பாவில் இருப்பதையும் தான் சொல்லியுள்ளார்.
அவரை வரவழைத்து இப்படி அசிங்கப்படுத்துவது மன வருத்தமாக உள்ளது. மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தான் மறுபிறவி குறித்து அவர் பேசியுள்ளார். அவர் பேசியது ஆன்மிக சொற்பொழிவு கிடையாது. ஊக்கமளிக்கும் பேச்சு தான்,' எனக் கூறியுள்ளார்.