மஹா., சட்டசபை இடைத்தேர்தல்; ரத்து செய்தது உயர் நீதிமன்றம்
மஹா., சட்டசபை இடைத்தேர்தல்; ரத்து செய்தது உயர் நீதிமன்றம்
ADDED : மார் 27, 2024 04:43 AM

நாக்பூர் : மஹாராஷ்டிராவின் அகோலா மேற்கு சட்டசபை தொகுதிக்கு ஏப்ரல் 26ல் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் கமிஷனின் அறிவிப்பை உயர் நீதிமன்றம் நேற்று ரத்து செய்தது.
மஹாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா, பா.ஜ., மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு ஏப்ரல் 19 துவங்கி மே 20 வரை ஐந்து கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது.
மாநிலத்தின் அகோலா மேற்கு தொகுதியின் பா.ஜ., - எம்.எல்.ஏ., கோவர்தன் சர்மா கடந்தாண்டு நவம்பரில் உயிரிழந்ததால், அத்தொகுதி காலியாக இருந்தது. லோக்சபா தேர்தலுடன் சேர்த்து அந்த தொகுதிக்கும் ஏப்ரல் 26ல் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது.
இடைத்தேர்தல் அறிவிப்பை ரத்து செய்யக் கோரி அத்தொகுதியைச் சேர்ந்த அனில் துபே என்பவர் மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
மஹாராஷ்டிராவுக்கு வரும் அக்டோபரில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில் இடைத்தேர்தல் வாயிலாக தேர்வு செய்யப்படும் புதிய உறுப்பினரின் பதவிக்காலம் ஓராண்டுக்கும் குறைவாகவே உள்ளது. எனவே இது மக்கள் பிரதிநிதித்துவ சட்ட விதிகளை மீறும் வகையில் இருப்பதால் தேர்தல் கமிஷனின் அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

