மஹாராஷ்டிரா தேர்தல் தோல்வி; காங்கிரஸ் தலைவர் ராஜினாமா
மஹாராஷ்டிரா தேர்தல் தோல்வி; காங்கிரஸ் தலைவர் ராஜினாமா
ADDED : நவ 26, 2024 12:59 AM

மும்பை: மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்ததை அடுத்து, மாநில காங்., தலைவர் பதவியில் இருந்து, நானா படோல் ராஜினாமா செய்தார்.
மஹாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், ஆளும் பா.ஜ., - சிவசேனா - அஜித் பவாரின் தேசியவாத காங்., அடங்கிய, 'மஹாயுதி' கூட்டணி, மொத்தமுள்ள 288 தொகுதிகளில், 233ஐ கைப்பற்றி வரலாற்று வெற்றி பெற்றுள்ளது.
காங்., - உத்தவ் தாக்கரேயின் சிவசேனா - சரத் பவாரின் தேசியவாத காங்., அடங்கிய, 'மஹா விகாஸ் அகாடி' கூட்டணி, 50க்கும் குறைவான இடங்களையே கைப்பற்றி உள்ளது.
மஹாராஷ்டிராவில் ஏப்., - மே மாதங்களில் நடந்த லோக்சபா தேர்தலில், மொத்தமுள்ள 48 தொகுதிகளில், 30ல் மஹா விகாஸ் அகாடி கூட்டணி வென்றது. இதில், காங்., மட்டும், 13 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றி சட்டசபை தேர்தலிலும் எதிரொலிக்கும் என்ற அதீத நம்பிக்கையுடன் களமிறங்கிய மஹா விகாஸ் அகாடிக்கு, ஏமாற்றமே மிஞ்சியது.
மொத்தம், 103 தொகுதி களில் போட்டியிட்ட பிரதான எதிர்க்கட்சியான காங்., வெறும் 16 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
கடந்த 2019 சட்டசபை தேர்தலில், 44 இடங்களை அக்கட்சி கைப்பற்றி இருந்தது. முன்னாள் எம்.பி.,யான நானா படோல் மஹாராஷ்டிரா காங்., தலைவராக, 2021ல் நியமிக்கப்பட்டார்.
இவரது தலைமையில், லோக்சபா தேர்தலில் காங்., அதிக தொகுதிகளை வென்றிருந்தாலும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சட்டசபை தேர்தலில், அக்கட்சி புஸ்வாணமாகி உள்ளது.
இந்நிலையில், மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, மாநில காங்., தலைவர் பதவியை, நானா படோல் நேற்று ராஜினாமா செய்தார். வரும் நாட்களில் மஹாராஷ்டிரா காங்கிரசில் பல அதிரடி மாற்றங்கள் இருக்கும் என கூறப்படுகிறது.