லோக்சபாவில் அப்படி! சட்டசபையில் இப்படி! மஹா., தேர்தலில் முடிவை மாற்றிய மக்கள்!
லோக்சபாவில் அப்படி! சட்டசபையில் இப்படி! மஹா., தேர்தலில் முடிவை மாற்றிய மக்கள்!
ADDED : நவ 23, 2024 11:53 AM

புதுடில்லி: லோக்சபா தேர்தலில், மஹாராஷ்டிராவில் எதிர்க்கட்சிகளுக்கு கை கொடுத்த வாக்காளர்கள், சட்டசபை தேர்தலில் ஆளுங்கட்சியை அரியணையை வழங்கி உள்ளனர்.
மக்கள் மனநிலை என்பது எப்போதும் நிரந்தரமானது அல்ல; அது, மாநிலத்துக்கு மாநிலம் மாறும்; மாதம் தோறும் கூட மாறும் என்பதை இப்போது நடந்து முடிந்துள்ள சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளது.
சமீபத்தில் நடந்த (2024ம் ஆண்டு) லோக்சபா தேர்தலில் மஹாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 48 தொகுதிகளில் பா.ஜ.,வின் மகாயுதி கூட்டணி 17 தொகுதிகளில் மட்டும் வென்றது. அதே நேரத்தில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியான மகா விகாஸ் அகாதி கூட்டணி 30 தொகுதிகளை அள்ளியது. எஞ்சிய ஒரு தொகுதியில் ஒரேயொரு சுயேட்சை (காங்கிரஸ் ஆதரவு) வென்றார்.
இந்த தேர்தல் நடந்து கிட்டத்தட்ட சரியாக 6 மாதங்கள் கழித்து நடைபெற்ற சட்டசபை தேர்தலில் மக்களின் மனநிலை முற்றிலும் மாறிவிட்டது. கடந்த முறை எதிர்க்கட்சிகளுக்கு அதிக ஆதரவு தெரிவித்த அதே வாக்காளர்கள், இம்முறை உல்டாவாக, ஆளும்கட்சிக்கு ஆதரவு அளித்து அரியணை வழங்கி இருக்கின்றனர்.
அதாவது, 6 மாதம் முன்பு முடிந்த லோக்சபா தேர்தலில் ஆளும்கட்சி கூட்டணிக்கு நோ சொன்ன வாக்காளர்கள், 180 நாட்கள் கழித்து அதே ஆளும்கட்சி கூட்டணிக்கு 'யெஸ்' சொல்லி இருக்கின்றனர். ஆளும் மகாயுதி கூட்டணியாக பா.ஜ., (149), முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா (போட்டியிட்டது 81 தொகுதிகள்), துணை முதல்வர் அஜித் பவார் (தேசியவாத காங். 59 தொகுதிகள்) களம் கண்டது.
2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் இதே கூட்டணியை ஆதரிக்காத வாக்காளர்கள், நடப்பு சட்டசபை தேர்தலில் வரவேற்றுள்ளனர். கிட்டத்தட்ட யாரும் எதிர்பார்க்காத வெற்றி விகிதாச்சாரத்தை அள்ளித் தந்திருக்கின்றனர். கட்சியின் முக்கிய வேட்பாளர்களுக்கு வெற்றியை பரிசளித்து இருக்கின்றனர். எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணியை ஓரம்கட்டி உள்ளனர். சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆகிய 2 கட்சிகளும் பிளவுப்பட்டு காணப்படும் சூழலில் நடந்த முதல் சட்டசபைத் தேர்தலில் மிக தெளிவாக ஆளும்கட்சியை ஆதரித்து உள்ளனர்.
மக்களின் மாறுபட்ட இந்த தீர்ப்பை பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வரவேற்றுள்ளன. அதே சமயம், வழக்கம் போல் எதிர்க்கட்சிக் கூட்டணி புகார் ராகம் பாடி வருகிறது. தேர்தல் முடிவுகளில் ஏதோ மர்மம் இருக்கிறது. இந்த முடிவுகளை ஏற்றுக் கொள்ள மாட்டோம், மக்களும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்று வெளிப்படையாக அறிவித்தும் இருக்கிறது.
எதுவானாலும், மக்களின் தீர்ப்பு இதுதான், ஏற்றுக் கொள்வதே சிறந்த அரசியல் பண்பாடு என்று வெற்றியை ருசித்துள்ள பா.ஜ., மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் கூறி உள்ளன.