அக்கிரமம் நடந்தால்தான் அரசுக்கு புத்தி வருமா; வழிகாட்டுதல் வெளியிட்ட மகாராஷ்டிரா அரசு
அக்கிரமம் நடந்தால்தான் அரசுக்கு புத்தி வருமா; வழிகாட்டுதல் வெளியிட்ட மகாராஷ்டிரா அரசு
ADDED : ஆக 22, 2024 08:49 AM

மும்பை: மகாராஷ்டிரா, பத்லாபூர் பள்ளியில், எல்.கே.ஜி., படிக்கும் 4 வயது சிறுமியர் இருவர் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக, பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மஹாராஷ்டிரா அரசு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது.
மஹாராஷ்டிரா, தானே அருகே பத்லாபூரில் உள்ள தனியார் பள்ளியில், எல்.கே.ஜி., படிக்கும் 4 வயது சிறுமியர் இருவரை துப்புரவு தொழிலாளி பாலியல் கொடுமை செய்த சம்பவத்தின் எதிரொலியாக, மஹாராஷ்டிராவின் தானே நகரில் கலவரம் வெடித்தது. பெற்றோர் மற்றும் பொது மக்கள் திரண்டு பள்ளியை அடித்து நொறுக்கினர். ரயில் மறியல், சாலை மறியல், கல்வீச்சு நடந்து பலர் காயம் அடைந்தனர்.
வழிகாட்டுதல்கள்
இந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக, பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மஹாராஷ்டிரா அரசு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது.
* மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சி.சி.டி.வி., கேமராக்களை பொருத்த வேண்டும்.
* ஆசிரியர் அல்லாத அனைத்து ஊழியர்களின் பின்னணி குறித்தும் விசாரிக்க வேண்டும்.
* 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பெண் ஆசிரியர்கள் தான் பாடம் கற்பிக்க வேண்டும்.
* மாணவர்களின் பாதுகாப்பை மேலும் அதிகரிக்க, பள்ளிகளில் புகார் பெட்டிகள் கட்டாயம் இருக்க வேண்டும். புகார் பெட்டிகள் இல்லையென்றால், பள்ளி தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
* மாணவர்கள் சம்பந்தப்பட்ட ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடந்தால், 24 மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட வேண்டும். மறைக்க முயற்சித்தால், சம்பந்தப்பட்டவர்களுக்கு கடும் தண்டனை விதிக்கப்படும்.
* இந்த உத்தரவுகளை கடைபிடிக்க தவறினால் பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்தல் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.