தனியார் துறையில் இனி 10 மணி நேரம் வேலை: மஹாராஷ்டிரா அரசு யோசனை
தனியார் துறையில் இனி 10 மணி நேரம் வேலை: மஹாராஷ்டிரா அரசு யோசனை
ADDED : ஆக 27, 2025 11:24 AM

மும்பை; மஹாராஷ்டிராவில் தனியார் துறையில் ஊழியர்களின் பணி நேரத்தை அதிகபட்சமாக 10 மணி நேரமாக உயர்த்த அம்மாநில அரசு ஆலோசித்து வருகிறது.
மஹாராஷ்டிராவில் நேற்றைய அமைச்சரவை கூட்டத்துக்கு முன்னதாக அம்மாநில தொழிலாளர் துறையின் சார்பில் ஒரு பரிந்துரை அளிக்கப்பட்டு உள்ளது. அதில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது;
தனியார் துறையில் பணிபுரியும் எந்த வயதுடையோரும் அதிகபட்சமாக 10 மணி நேரத்துக்கு மேல் பணியாற்ற வேண்டியது இல்லை. இந்த பணி நேரம் அனைத்து பணி நாட்களுக்கும் பொருந்தும். அவசர அல்லது முக்கியமான வேலை என்னும் பட்சத்தில் இதை 12 மணி நேரமாக உயர்த்தலாம்.
பணியாளர் ஒருவர் தொடர்ந்து 6 மணி நேரம் உழைத்தால் அவருக்கு 30 நிமிடங்கள் இடைவேளை அளிக்கலாம். தற்போது இந்த பணிநேரம் என்பது 5 மணிநேரமாகவே உள்ளது.
3 மாதங்களுக்கு இருக்கும் 125 மணிநேரம் என்ற கூடுதல் பணிநேரத்தை, 144 ஆக உயர்த்தலாம்.
இவ்வாறு அந்த பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டால், மாநிலத்தில் 20 மற்றும் அதற்கு மேலான ஊழியர்களுடன் இயங்கும் நிறுவனங்களுக்கு பொருந்தும்.