ADDED : நவ 04, 2025 08:41 PM

மும்பை: மஹாராஷ்டிராவில் உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் 2 ஆம் தேதி நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, மாநிலத்தில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள உள்ளாட்சித் தேர்தல்களை நடத்துவதற்கு ஜனவரி 31, 2026 அன்று இறுதி காலக்கெடுவை நிர்ணயித்துள்ளது.
மும்பையில் செய்தியாளர்களிடம் மாநில தேர்தல் ஆணையர் தினேஷ் வாக்மரே கூறியதாவது:
மஹாராஷ்டிரா முழுவதும் உள்ள 246 நகராட்சி மன்றங்கள் மற்றும் 42 நகர பஞ்சாயத்துகளுக்கான ஓட்டுப்பதிவு டிசம்பர் 2 ஆம் தேதியும்,ஓட்டு எண்ணிக்கை டிசம்பர் 3 ல் நடைபெற உள்ளது.
நவம்பர் 17ல் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி என்றும், வேட்பு மனுக்கள் பரிசீலனை நவம்பர் 18 அன்றும், வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி நவம்பர் 21 அன்றும் நடைபெறும்.
டிசம்பர் 2 ஆம் தேதி 246 நகராட்சி மன்றங்கள் மற்றும் 42 நகர் பஞ்சாயத்துகளில் 6,859 உறுப்பினர்களையும் 288 தலைவர்களையும் தேர்ந்தெடுக்க மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் ஓட்டுப்பதிவு நடைபெறும்.
தகுதியான வாக்காளர்களின் எண்ணிக்கை 1.7 கோடி, இதில் 53,79,931 ஆண்கள், 53,22,870 பெண்கள் மற்றும் 775 பேர் உள்ளனர். 13,355 வாக்குச் சாவடிகள் இருக்கும், மொத்த வார்டுகளின் எண்ணிக்கை 3,820 ஆகும்.
இவ்வாறு தினேஷ் வாக்மரே கூறினார்.

