கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் மஹாராஷ்டிரா எரியும்: மனோஜ் ஜரங்கே
கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் மஹாராஷ்டிரா எரியும்: மனோஜ் ஜரங்கே
ADDED : பிப் 15, 2024 01:01 AM

ஜல்னா, ''உண்ணாவிரத போராட்டத்தில் என் உயிர் போனால், மராத்தா சமூகத்தினர் மஹாராஷ்டிராவை எரித்து விடுவர்,'' என, சமூக ஆர்வலர் மனோஜ் ஜரங்கே எச்சரித்துள்ளார்.
மஹாராஷ்டிராவில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, பா.ஜ., தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது.
மாநிலத்தில் உள்ள மராத்தா சமூகத்தினருக்கு கல்வி மற்றும் அரசு பணிகளில் இடஒதுக்கீடு வழங்கக் கோரி, அதன் தலைவரும், சமூக ஆர்வலருமான மனோஜ் ஜரங்கே பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக, கடந்த டிச., 20ல் ஜல்னா மாவட்டத்தில் இருந்து நவி மும்பைக்கு நடைபயணம் சென்றார்.
அப்போது, உண்ணாவிரத போராட்டத்தை துவங்கிய ஜரங்கேவிடம், கோரிக்கைகள் நிறைவேற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என மஹாராஷ்டிரா அரசு உத்தரவாதம் அளித்தது.
இதையடுத்து, தன் போராட்டத்தை தற்காலிகமாக அவர் நிறுத்தி வைத்தார். இருப்பினும், கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால், கடந்த 10ம் தேதி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை துவங்கினார்.
ஐந்து நாட்களுக்கு மேலாக நீடித்து வரும் உண்ணாவிரதப் போராட்டத்தால், ஜரங்கேவின் உடல்நிலை பாதிப்பு அடைந்துள்ளது.
இருப்பினும், மருத்துவர்கள் சோதனை செய்ய அவர் அனுமதி மறுத்துள்ளார். போராட்டத்தின் போது நேற்று பேசிய ஜரங்கே கூறியதாவது:
அனைத்து மராத்தியர்களுக்கும் குன்பி எனப்படும் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கான சான்றிதழ் வழங்க வேண்டும் என கோரியிருந்தோம். கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தினோம்.
இது எதுவும் நடக்கவில்லை. இது தொடர்பான அறிவிப்பை வெளியிட மஹாராஷ்டிர அரசு சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும்.
இந்த விஷயத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர்கள் தேவேந்திர பட்னவிஸ், அஜித் பவார் ஆகியோர் ஏமாற்றிவிட்டனர். ராமாயணத்தில் ஹனுமான் இலங்கையை வாலால் தீக்கிரையாக்கினார்.
இந்த போராட்டத்தின் போது நான் இறந்தால், மராட்டியர்கள் மஹாராஷ்டிராவை இலங்கையாக மாற்றுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.

