மகிஷா தசரா கொண்டாட்டம் பா.ஜ., - எம்.பி., யதுவீர் ஆதரவு
மகிஷா தசரா கொண்டாட்டம் பா.ஜ., - எம்.பி., யதுவீர் ஆதரவு
ADDED : செப் 21, 2024 11:08 PM

மைசூரு: ''மகிஷா தசரா கொண்டாட அரசியல் சட்டத்தில் இடம் உள்ளது. எனவே எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை,'' என மைசூரு பா.ஜ., - எம்.பி., யதுவீர் தெரிவித்தார்.
மைசூரு தசராவின்போது, தலித் சங்கர்ஷ சமிதி சார்பில் 'மகிஷா அரக்கன் அல்ல; புத்த மதத்தை பரப்பியவர்' என கூறி, மகிஷா தசரா கொண்டாடி வருகின்றனர்.
இதற்கு, பா.ஜ., முன்னாள் எம்.பி., பிரதாப் சிம்ஹா தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்தார். கடந்தாண்டு மகிஷா தசரா கொண்டாட தலித் சங்கர்ஷ சமிதியும், எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்த பா.ஜ.,வும் போலீசிடம் அனுமதி கேட்டிருந்தது. இரு நிகழ்ச்சிக்கும் போலீசார் அனுமதி மறுத்தனர்.
நடப்பாண்டும் மகிஷா தசரா கொண்டாட்டம் தொடர்பான சர்ச்சை எழுந்துள்ளது. இதுதொடர்பாக மைசூரு பா.ஜ., - எம்.பி., யதுவீர் கூறியதாவது:
அரசியல் அமைப்பு சட்டத்தில் எந்த கொண்டாட்டத்துக்கும் அனுமதி உண்டு. மகிஷா தசரா கொண்டாடினால், எனக்கு ஆட்சேபனை இல்லை. இதை கொண்டாடுவது அவர்களின் உரிமை.
பொது இடத்திலோ அல்லது வீடுகளிலோ கொண்டாடலாம். சாமுண்டி மலையில் கொண்டாடுவதால், வேண்டாம் என்கின்றனர். இதுதொடர்பாக ஆலோசிப்பேன்.
இந்தாண்டு தசராவை துவக்கி வைக்க, எழுத்தாளர் ஹம்பா நாகராஜய்யாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறேன்.
முனிரத்னா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால், பா.ஜ.,வுக்கு சற்று தர்மசங்கடமாக உள்ளது. அவர் மீது மிரட்டல், ஜாதி துஷ்பிரயோகம், லஞ்சம் கேட்டது, பலாத்கார வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை நடந்து வருகிறது; அறிக்கை வந்த பின்னரே அவர் குற்றவாளியா, இல்லையா என்பது தெரியவரும்.
இவ்வாறு அவர் கூறினார்.