திரிணமுல் காங்கிரஸ் பெண் எம்.பி. மஹுவா வாய் கொழுப்பு!
திரிணமுல் காங்கிரஸ் பெண் எம்.பி. மஹுவா வாய் கொழுப்பு!
ADDED : ஆக 30, 2025 08:12 AM

கோல்கட்டா: வங்கதேசத்தினர் இந்தியாவுக்குள் ஊடுருவுவது மேற்கு வங்க அரசியலில் முக்கிய பிரச்னையாக உருவெடுத்துள்ள நிலையில், அதுபற்றி திரிணமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
“ இந்திய எல்லையை காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பி.எஸ்.எப். உள்ளிட்ட ஐந்து படைகள் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் வருகிறது. அதற்கு முழு பொறுப்பு உள்துறை அமைச்சர் அமித் ஷாதான். அப்படியிருக்க மேற்கு வங்க அரசை எப்படி பா.ஜ.வினர் குறை கூற முடியும்?” என மஹுவா ஆவேசமாக கேட்டார்.
“ நான் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். அவர்கள் (பா.ஜ.) தொடர்ந்து ஊடுருவல் பற்றி பேசுகிறார்கள். நாட்டின் எல்லையை பாதுகாக்கும் பணியை 5 படைகள் செய்து வருகின்றன. அவை மத்திய உள்துறை அமைச்சரின் கட்டுப்பாட்டில் வருகின்றன.
“ அப்படி இருக்கையில், ஆகஸ்ட் 15ம்தேதி செங்கோட்டையில் பிரதமர் மோடி ஊடுருவல் பற்றி பேசுகிறார். இதனால் நாட்டின் மக்கள் தொகையில் மாற்றம் ஏற்படுகிறது என்கிறார். அவர் இதைச் சொல்லும்போது உள்துறை அமைச்சர் சிரித்து கொண்டே கைதட்டுகிறார்.
“ ஊடுருவல்காரர்கள் தினமும் நம் நாட்டினுள் வந்து கொண்டிருக்கின்றனர். நம் அம்மாக்களையும், சகோதரிகளையும் மோசமான முறையில் பார்க்கிறார்கள்; நம் நிலங்களை அபகரிக்கிறார்கள் என்றால், இதற்கெல்லாம் யார் காரணம்?” என மஹுவா கேட்டார்.
“ அமித் ஷாவின் தலையை வெட்டி உங்கள் (பிரதமர்) மேஜையில்தான் வைக்க வேண்டும். வேறு வழியில்லை. உள்துறை அமைச்சரும் உள்துறை அமைச்சகமும் நம் எல்லைகளை பாதுகாக்க தவறினால் அது யார் தவறு?
எங்கள் தவறா? உங்கள் தவறா? பி.எஸ்.எப். என்னதான் செய்கிறது?” என்றார் மஹுவா. மஹுவா மொய்த்ராவின் பேச்சு பா.ஜ. தொண்டர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. சந்தீப் மஜும்தார் என்ற பா.ஜ. தொண்டர் மஹுவாவை கைது செய்யுமாறு போலீசில் புகார் அளித்தார்.
மம்தாவின் தூண்டுதல்படிதான் மஹுவா இப்படி பேசியிருக்கிறார். இதுதான் திரிணமுல் காங்கிரசின் நிலைப்பாடா? என்பதை மம்தா விளக்க வேண்டும். மஹுவா மன்னிப்பு கேட்க மம்தா சொல்ல வேண்டும். இல்லையென்றால், அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும்” என பா.ஜ. தலைவர்கள் கூறுகின்றனர்.