ADDED : ஜன 20, 2024 01:13 AM

புதுடில்லி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரசை சேர்ந்தவர் மஹுவா மொய்தரா. அங்குள்ள கிருஷ்ணா நகர் தொகுதியின் எம்.பி.,யாக இருந்த இவர், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதானிக்கு எதிராக பார்லி.,யில் கேள்வி கேட்க, தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியிடம் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது.
இது குறித்து விசாரணை நடத்திய பார்லி., ஒழுங்கு நடவடிக்கை குழு, மஹுவாவை பதவி நீக்கம் செய்ய பரிந்துரைத்தது.
இதையடுத்து லோக்சபா எம்.பி., பதவியில் இருந்து, அவர் கடந்த மாதம் நீக்கப்பட்டார். இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனு விசாரணையில் உள்ளது.
இதற்கிடையே, பதவி நீக்கம் செய்யப்பட்டதால், புதுடில்லியில் தங்கியுள்ள அரசு பங்களாவை காலி செய்யும்படி, மத்திய வீட்டு வசதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் எஸ்டேட்ஸ் இயக்குனரகம், கடந்த டிச., 11ல் மஹுவாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது. வீட்டை காலி செய்யாவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் விடப்பட்டது.
இதை எதிர்த்து டில்லி உயர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், தான் தங்கியிருந்த '9பி' பங்களாவை, மஹுவா மொய்த்ரா நேற்று காலி செய்தார்.
முன்னதாக, அவரை காலி செய்ய வைக்க எஸ்டேட்ஸ் இயக்குனரக அதிகாரிகள் குழு, அவரது வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அதற்கு முன்னதாகவே அவர் அரசு பங்களாவை காலி செய்தார்.