சபரிமலையில் மகரஜோதி தரிசனம்: சரண கோஷங்களுடன் பக்தர்கள் பரவசம்
சபரிமலையில் மகரஜோதி தரிசனம்: சரண கோஷங்களுடன் பக்தர்கள் பரவசம்
UPDATED : ஜன 14, 2025 06:44 PM
ADDED : ஜன 14, 2025 06:42 PM

சபரிமலை: பொன்னம்பலமேட்டில் இன்று (ஜன.,14) மாலை 6:43 மணிக்கு காட்சியளித்த மகரஜோதியை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கேரள மாநிலம், சபரி மலை ஐயப்பன் கோவிலில், இந்த ஆண்டுக்கான மகரவிளக்கு காலம் நிறைவு கட்டத்தை நெருங்கியது. இன்று மாலை, மகர விளக்கு பெருவிழாவும், மாலையில் பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனமும் நடந்தது. மகர சங்கரம பூஜை இன்று காலை 8: 45 மணிக்கு நடைபெற்றது.
பந்தளத்திலிருந்து நேற்று முன்தினம் புறப்பட்ட திருவாபரண பவனி இன்று மாலை 5:36 மணிக்கு சரங்குத்தி வந்தடைந்தது. அங்கு தேவசம்போர்டு அதிகாரிகளின் வரவேற்புக்கு பின் பெரிய நடை பந்தல் வழியாக, சன்னிதானம் வந்தடைந்தது.
தந்திரியும் மேல் சாந்தியும் திருவாபரண பெட்டியை வாங்கி நடை அடைத்து ஆபரணங்கள் அணிவித்து நடை திறந்து தீபாராதனை நடத்தினர். இந்த நேரத்தில் கோவில் நேர் எதிரே கிழக்கு பக்கத்தில் மகர நட்சத்திரம் ஒளிவிட்டு பிரகாசித்தது. இதனை பக்தர்கள் சரண கோஷத்துடன் தரிசனம் செய்தனர். தொடர்ந்து பொன்னம்பலமேட்டில் மூன்று முறை ஜோதி காட்சி காட்சியளித்தது.
சபரிமலையில் பக்தர்கள் கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர். இதனால் அங்கு பக்தர்களின் சரண கோஷம் விண்ணை பிளந்தது.