மம்தாவை கூட்டணி தலைவராக்குங்க; அந்த வேலைக்கு காங்., சரிபட்டு வராது; சொல்கிறது திரிணமுல் காங்.,
மம்தாவை கூட்டணி தலைவராக்குங்க; அந்த வேலைக்கு காங்., சரிபட்டு வராது; சொல்கிறது திரிணமுல் காங்.,
ADDED : நவ 25, 2024 09:06 AM

கோல்கட்டா: 'மம்தாவை இண்டியா கூட்டணி தலைவராக்க வேண்டும். காங்கிரஸால் பா.ஜ.,வை தோற்கடிக்க முடியாது' என திரிணமுல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் 6 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. ஆளும் திரிணமுல் காங்கிரஸ் கட்சி 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்று சாதனை படைத்தது. இது அக்கட்சி தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. இது தொடர்பாக, அக்கட்சி மூத்த தலைவர் கல்யாண் பானர்ஜி நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: முதலில் ஹரியானாவிலும், இப்போது மஹாராஷ்டிராவிலும் காங்கிரஸ் போராடி தோல்வி அடைந்தது. ஆனால், பா.ஜ.,வை மம்தா மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியால் தோற்கடிக்க முடிந்தது. காங்கிரஸால் பா.ஜ.,வை தோற்கடிக்க முடியாது.
மம்தாவை இண்டியா கூட்டணி தலைவராக்க வேண்டும். தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருவதால், காங்கிரஸ் ஏன் தனது ஈகோவை ஒதுக்கி வைத்துவிட்டு, இண்டியா கூட்டணியை வழிநடத்தும் பொறுப்பை மம்தா பானர்ஜியிடம் ஒப்படைக்கவில்லை? அவரால் மட்டுமே பா.ஜ.,வை தோற்கடிக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து திரிணமுல் காங்., ராஜ்யசபா எம்.பி.,குணால் கோஷ் கூறியதாவது: கல்யாண் பானர்ஜி ஒரு மூத்த அரசியல்வாதி. அவரது கருத்து குறித்து நாங்கள் நேரடியாகக் கருத்து கூற மாட்டோம். ஆனால் அவரது கருத்தை நாங்கள் ஆதரிக்கிறோம். மம்தா பானர்ஜியின் தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் மேற்குவங்கத்தில் பா.ஜ.,வை பலமுறை தோற்கடித்துள்ளது.
இந்த வெற்றியை ஜார்கண்டிலும் பிரதிபலிக்க முடியும். அப்படியானால் ஹரியானா அல்லது மஹாராஷ்டிராவில் ஏன் முடியவில்லை. மஹாராஷ்டிராவில் காங்கிரஸ் தோல்விக்கான காரணங்களை இண்டியா கூட்டணி கூட்டங்களில் விவாதிக்கவில்லை என்றால், கூட்டணியை எப்படி பலப்படுத்த முடியும்?. இவ்வாறு அவர் கூறினார்.