ADDED : ஏப் 28, 2025 01:13 AM

கொச்சி : பிரபல மலையாள இயக்குநர்கள் காலித் ரஹ்மான், அஷ்ரப் ஹம்சா உள்ளிட்ட மூவர் நேற்று கொச்சியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கஞ்சா வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்டனர்.
கேரளாவைச் சேர்ந்த திரைப்பட ஒளிப்பதிவாளர் சமீர் தாஹிர், கொச்சியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளார். அங்கு போதைப் பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து விசாரிப்பதற்காக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார், சமீர் வீட்டில் நேற்று அதிகாலை சோதனை நடத்தினர். அதில் உயர்ந்த ரகத்தை சேர்ந்த கஞ்சா சிக்கியது.
அங்கு சமீர் இல்லை. மலையாள திரைப்பட இயக்குநர்களான காலித் ரஹ்மான், அஷ்ரப் ஹம்சா மற்றும் அவர்களின் நண்பரான ஷாலிப் முகமது ஆகியோர் இருந்தனர். காலித் ரஹ்மானின் சமீபத்திய படமான ஆலப்புழா ஜிம்கானா தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
கஞ்சா வைத்திருந்த மூவர் மீதும் போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்யப்பட்டு, பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா எங்கிருந்து வந்தது என விரிவான விசாரணை துவங்கப்பட்டுள்ளதாக, போலீசார் தெரிவித்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன், நடிகர் ஷைன் டாம் சாக்கோ, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் ஹோட்டல் ஒன்றில் நடத்திய சோதனையின்போது தப்பியோடினார். பின் கைது செய்யப்பட்டு, ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

