தாஜ்மஹாலில் மெய்சிலிர்த்த மாலத்தீவு அதிபர் முய்சு
தாஜ்மஹாலில் மெய்சிலிர்த்த மாலத்தீவு அதிபர் முய்சு
ADDED : அக் 09, 2024 04:32 AM

ஆக்ரா: அரசு முறைப் பயணமாக நம் நாட்டுக்கு வந்துள்ள மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, உலகப் புகழ் பெற்ற தாஜ்மஹாலை நேற்று சுற்றிப் பார்த்தார்.
நம் அண்டை நாடான மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, நான்கு நாட்கள் அரசு முறைப் பயணமாக, நம் நாட்டுக்கு வந்துள்ளார். டில்லியில், ஜனாதிபதி திரவுபதி முர்முவை நேற்று முன்தினம் சந்தித்து பேசிய அவர், பிரதமர் மோடியையும் சந்தித்தார். அப்போது, இந்தியா - மாலத்தீவு இடையே ஐந்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்நிலையில், டில்லியில் இருந்து தனி விமானத்தில் உத்தர பிரதேசத்தின் ஆக்ராவுக்கு வந்த மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, அவரது மனைவி சஜிதா முகமது ஆகியோரை, மாநில அமைச்சர் யோகேந்திர உபாத்யாய் வரவேற்றார். தொடர்ந்து, காரில் தாஜ்மஹாலுக்கு இருவரும் சென்றனர்.
மனைவி சஜிதா உடன் தாஜ்மஹாலை சுற்றிப் பார்த்த அதிபர் முகமது முய்சு, புகைப்படங்களும் எடுத்துக் கொண்டார். 'தாஜ்மஹாலின் அழகை வார்த்தைகளால் விவரிப்பது கடினம். இது, காதல் மற்றும் கட்டடக்கலை சிறப்புக்கு ஒரு சான்று' என, பார்வையாளர்கள் புத்தகத்தில், அதிபர் முகமது முய்சு எழுதி உள்ளார்.

