பெண்களுக்கு ஆண் 'டெய்லர்'கள் ஆடை தைக்க அளவு எடுக்கக்கூடாது: உ.பி., மகளிர் கமிஷன் பரிந்துரை
பெண்களுக்கு ஆண் 'டெய்லர்'கள் ஆடை தைக்க அளவு எடுக்கக்கூடாது: உ.பி., மகளிர் கமிஷன் பரிந்துரை
ADDED : நவ 09, 2024 12:44 AM

லக்னோ: 'பெண்களுக்கு ஆடைகள் தைக்க, ஆண் டெய்லர்கள் அளவு எடுக்கக் கூடாது; அதை பெண்கள் மட்டுமே செய்ய வேண்டும்' என்பது உட்பட பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை உத்தர பிரதேச மகளிர் கமிஷன், மாநில அரசுக்கு பரிந்துரைக்கஉள்ளது.
உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இங்கு, சமீபகாலமாக பெண்கள் மீதான பாலியல் சம்பவங்கள் அதிகரித்து வருவது தொடர்பாக, அங்குள்ள மாநில மகளிர் கமிஷனுக்கு புகார்கள் குவிந்தன.
குறிப்பாக, தையலகம், அழகு நிலையங்கள், பள்ளி வேன்கள் ஆகியவற்றில் பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீது பாலியல் சீண்டல்கள் நடத்தப்படுவது குறித்து குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. இது போன்ற சம்பவங்களை தடுப்பது தொடர்பாக, உத்தர பிரதேச மகளிர் கமிஷன் உறுப்பினர்கள் ஆலோசனை நடத்தினர்.
மகளிர் கமிஷனின் தலைவர் பபிதா சவுஹான் தலைமையில் நடந்த கூட்டத்தில், பெண்கள் பாதுகாப்புக்காக கூடுதலாக மேற்கொள்ள வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இது குறித்து கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர் ஹிமானி அகர்வால் கூறியதாவது:
பெண்கள் பாதுகாப்புக்காக கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
1 தையலகங்களில் பெண்களுக்கு ஆண் டெய்லர்கள் அளவு எடுக்கக் கூடாது; பெண்கள்தான் அளவு எடுக்க வேண்டும். தையலகங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்
2 சலுான், அழகு நிலையங்களில் பெண்களுக்கு, பெண்களே முடிவெட்டுதல், சிகை அலங்காரம் உள்ளிட்டவற்றை செய்ய வேண்டும். இந்த இரு தொழில்களிலும் ஈடுபடும் சில ஆண்கள், பெண்களை தவறாக தொடுவதாக ஏராளமான புகார்கள் வந்ததை அடுத்து, இந்த ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன
3 பள்ளி வேன் மற்றும் பஸ்களில் பெண் ஆசிரியை அல்லது பெண் பாதுகாவலர் இருப்பது அவசியம். இரு பாலர்கள் வந்து செல்லும் உடற்பயிற்சி கூடம், யோகா மையங்களில் பெண்களுக்கு, பெண் பயிற்சியாளர்கள் மட்டுமே பயிற்சி தர வேண்டும்
4 டியூஷன் சென்டர் உள்ளிட்ட பயிற்சி மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட வேண்டும். அங்கு, பெண்களுக்கு தனி கழிப்பறைகள் ஏற்படுத்தித் தர வேண்டும்
5 பெண் வாடிக்கையாளர்கள் அதிகம் வரும் கடைகள், நிறுவனங்களில் அவர்களுக்கு உதவ பெண் உதவியாளர்கள் இருத்தல் அவசியம்.
இது போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டு, அவை தொடர்பான பரிந்துரைகள் மாநில அரசுக்கு அனுப்பப்பட உள்ளன.
இதற்கேற்ப, அரசு சட்டங்களை ஏற்படுத்தும் என நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.