வாக்குறுதி திட்டங்கள் குறித்து பா.ஜ., அவதுாறு மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு
வாக்குறுதி திட்டங்கள் குறித்து பா.ஜ., அவதுாறு மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு
ADDED : நவ 09, 2024 11:17 PM

பெங்களூரு: ''காங்கிரஸ் அரசின் வாக்குறுதித் திட்டங்கள் குறித்து, பிரதமர் நரேந்திர மோடி உட்பட பா.ஜ., தலைவர்கள் அனைவரும் அவதுாறு பரப்புகின்றனர்,'' என, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றஞ்சாட்டினார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
எங்கள் பட்ஜெட்டை பா.ஜ., தலைவர்கள் சரியாக படிக்கவில்லை. முதலில் தெளிவான தகவலை தெரிந்து கொண்டு, அதன்பின் பேச வேண்டும். கர்நாடக அரசின் ஐந்து வாக்குறுதித் திட்டங்களை காப்பியடித்து மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான் உட்பட பல்வேறு மாநிலங்களின் சட்டசபை தேர்தலில் பா.ஜ., வாக்குறுதி அளித்துள்ளது.
ஆனால் கர்நாடக அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில், பிரதமர் மோடி உட்பட பா.ஜ., தலைவர்கள், வாக்குறுதித் திட்டங்கள் குறித்து அவதுாறு பரப்புகின்றனர். கர்நாடகா உட்பட பல இடங்களில் காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது.
கர்நாடகாவில் ஐந்துத் திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்துகிறது. பா.ஜ.,வினர் பொய்யான வாக்குறுதிகளை அளித்து, மக்களை திசை திருப்புகின்றனர்.
பிரதமர் மோடி இதற்கு முன்பு, எட்டு கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக கூறியிருந்தார். அதை செயல்படுத்தினாரா? விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்கினாரா, ஒவ்வொருவரின் கணக்கிலும், 15 லட்சம் ரூபாய் செலுத்தினாரா?
இரண்டு ஆண்டுகளில் புல்லட் ரயில் கொண்டு வருவதாக வாக்குறுதி அளித்தார். அவர் அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. மத்தியில், காங்கிரஸ் அரசு இருந்தபோது, கொடுத்த வாக்குறுதிகளின்படி நடந்து கொண்டது.
ஜார்க்கண்டில் பிரதமர் உரையாற்றியபோது, பொய் பிரசாரம் செய்தார். அதற்கு நான் அங்கேயே விளக்கமளித்தேன். கர்நாடகாவில் வாக்குறுதித் திட்டங்களுக்கு 52,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதில் 47 சதவீதம் தொகை செலவிடப்பட்டுள்ளது. பா.ஜ., தேர்தலுக்காக பொய்ப்பிரசாரம் செய்கின்றனர். இதை மக்கள் நம்பக்கூடாது.
வக்பு விஷயம் தொடர்பாக, நான் எதுவும் கூறமாட்டேன். சட்டம் குறித்து அமைக்கப்பட்ட பார்லிமென்ட் இணை கமிட்டியில் நானும் உறுப்பினராக இருக்கிறேன். லோக்சபாவில் கமிட்டி அறிக்கை தாக்கல் செய்யும்போது, என் கருத்தை தெரிவிப்பேன்.
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் குறித்து, நான் அவ்வப்போது பேசமாட்டேன். மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் குறித்து ஆய்வு செய்ய நாங்கள் குழு அமைத்துள்ளோம். இதில் இபிஷேக் மனு சிங்வி, கபில் சிபில் உட்பட, பலர் உள்ளனர். அவர்களின் அறிக்கையை எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.