ADDED : டிச 19, 2024 01:42 AM
புதுடில்லி, வெளிநாட்டுக்கு தப்பியோடிய தொழிலதிபர் விஜய் மல்லையாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளை விற்று, வங்கிகளுக்கு 14,131 கோடி ரூபாய் திருப்பி அளிக்கப்பட்டு உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இது குறித்து லோக்சபாவில் அவர் கூறியதாவது:
மிகப் பெரிய அளவிலான பொருளாதாரக் குற்றங்களில் ஈடுபட்டோரிடம் இருந்து சொத்துகளை பறிமுதல் செய்து, அவற்றை பணமாக்கி உரியவர்களிடம் ஒப்படைக்கும் பணியை அமலாக்கத்துறை சிறப்பாக செயலாற்றி வருகிறது.
அதன்படி, தொழிலதிபர் விஜய் மல்லையாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளை விற்று, அவற்றில் கிடைத்த 14,131 கோடி ரூபாய், பொதுத்துறை வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. வைர வியாபாரி நிரவ் மோடியின் சொத்துகளை விற்று, 1,052 கோடி ரூபாய், வங்கிகளிடம் திருப்பி அளிக்கப்பட்டுள்ளது.
மெஹுல் சோக்சிக்கு சொந்தமான 2,565 கோடி ரூபாய் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு, ஏலம் விடப்பட உள்ளன.
என்.எஸ்.இ.எல்., எனப்படும் தேசிய உடனடி பரிமாற்ற சந்தை ஊழலில், 17.47 கோடி ரூபாய், முதலீட்டாளர்களுக்கு திருப்பி அளிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு பொருளாதார குற்றங்களில் பணத்தை இழந்த வங்கிகள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு மொத்தம் 22,280 கோடி ரூபாய் திருப்பி அளிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.