பெங்காலி எதிர்ப்பு கொள்கை; பா.ஜ., மீது மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
பெங்காலி எதிர்ப்பு கொள்கை; பா.ஜ., மீது மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
ADDED : ஜூலை 11, 2025 08:29 AM

கோல்கட்டா: டில்லியில் ஜெய் ஹிந்த் காலனியில் வசிக்கும் பெங்காலி மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவதாக கூறிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பெங்காலி எதிர்ப்பு கொள்கையை பா.ஜ., கடைபிடிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; வசந்த் குன்ச்சின் ஜெய் ஹிந்த் காலனியில் இருந்து வரும் செய்திகள் மிகவும் வருத்தத்தைத் தருகின்றன. இந்த காலனியில் பெரும்பாலும் வாழ்பவர்கள் பெங்காலிகள், அவர்கள் தான் தொழிலாளர்களாக நகரத்தை கட்டியெழுப்புகிறார்கள்.
அவர்களுக்கான தண்ணீர் விநியோகம் பா.ஜ., தலைமையிலான அரசின் உத்தரவின் பேரில் துண்டிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்றிரவு திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது.  தண்ணீர் டேங்கர்களை டில்லி போலீஸ் மற்றும் அதிவிரைவு படையினர் தடுத்ததாக குடியிருப்புவாசிகள் குற்றம்சாட்டியுள்ளனர் கடந்த டிசம்பரில் ஏற்கனவே டில்லி போலீஸால் நடத்தப்பட்ட மீறலுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போதே, தற்போது மக்களை கட்டாயமாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  வாழ்விடம், தண்ணீர், மின்சாரம் போன்ற அடிப்படை உரிமைகளை பறிக்கும் ஒரு நாட்டை நாம் எப்படி ஜனநாயக அரசு என்று கூற முடியும்?
மேற்கு வங்கத்தில் 1.5 கோடிக்கும் அதிகமான கூலி தொழிலாளர்கள் கண்ணியத்துடன் வாழ்கிறார்கள். ஆனால் பா.ஜ., ஆளும் மாநிலங்களில் பெங்காலிகள் தங்கள் நாட்டிலேயே ஊடுருவியவர்கள் போல நடத்தப்படுகிறார்கள். வங்க மொழி பேசுவது ஒருவரை வங்கதேசத்தைச் சேர்ந்தவராக ஆக்காது. எந்த மொழி பேசினாலும் அவர்களும் இந்தியாவின் குடிமக்களே.
மேற்கு வங்கத்தில் பெங்காலிகளை ஒடுக்க முடியாமல் தோல்வியடைந்த பா.ஜ.,, இப்போது தங்கள் வங்காளவிரோத நடவடிக்கைகளை பிற மாநிலங்களில் செய்து வருகிறது. குஜராத், மகாராஷ்டிரா, ஒடிசா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வங்கமொழி பேசும் மக்கள் இலக்காக்கப்பட்டு துன்புறுத்தப்படுகிறார்கள். இப்போது, இந்த வன்முறை டில்லியில் நடந்துள்ளது. வங்க மக்கள் தங்கள் நாட்டிலேயே அந்நியர்களாக நடத்தப்படும்போது நாங்கள் மவுனமாக இருக்க மாட்டோம். ஒடுக்கப்பட்ட ஒவ்வொரு குரலுடனும் மேற்கு வங்கம் ஒன்றாக நிற்கிறது, இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

