தனி ஆளாக விடப்படும் மம்தா பானர்ஜி: அடுத்தடுத்து ராஜினாமா செய்யும் எம்.பி.,க்கள்
தனி ஆளாக விடப்படும் மம்தா பானர்ஜி: அடுத்தடுத்து ராஜினாமா செய்யும் எம்.பி.,க்கள்
UPDATED : ஜூன் 10, 2026 11:32 PM
ADDED : ஜூன் 10, 2026 10:42 PM

புதுடில்லி: மேற்கு வங்க சட்டசபை தேர்தல் தோல்வியால், முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்., உட்கட்சி பூசலால் சிதறி வரும் நிலையில், அக்கட்சியின் ராஜ்யசபா எம்.பி., சுஷ்மிதா தேவ், நேற்று ராஜினாமா செய்தார்.
மேற்கு வங்கத்தில் ஏப்ரலில் நடந்த சட்டசபை தேர்தலில், ஆட்சி அதிகாரத்தை பா.ஜ., முதன்முறையாக கைப்பற்றியது. அக்கட்சியின் மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி முதல்வரானார். ஆளுங்கட்சியாக இருந்த மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்., படுதோல்வி அடைந்தது. அவரும் தோல்வி அடைந்தார். இதன் மூலம், 15 ஆண்டு கால திரிணமுல் காங்., ஆட்சி முடிவுக்கு வந்தது.
தேர்தல் தோல்வியால், திரிணமுல் காங்கிரசில் உட்கட்சி பூசல் வெடித்துள்ளது. கட்சி தலைவர் மம்தா பானர்ஜி, அவரது உறவினரும், கட்சி பொதுச்செயலரும், லோக்சபா எம்.பி.,யுமான அபிஷேக் பானர்ஜி ஆகியோருக்கு எதிராக, திரிணமுல் காங்., - எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள், நிர்வாகிகள் போர்க்கொடி துாக்கி உள்ளனர்.
திரிணமுல் காங்கிரசில் இருந்து நீக்கப்பட்ட ரிதபிரதா பானர்ஜி தலைமையில் எம்.எல்.ஏ.,க்கள் அணியும், லோக்சபா எம்.பி., ககோலி கோஷ் தஸ்திதார் தலைமையில் எம்.பி.,க்கள் அணியும் செயல்படுகிறது. இதனால் மம்தா கடும் மன உளைச்சலில் இருக்கிறார்.
இது போதாதென திரிணமுல் காங்., கவுன்சிலர்கள், நிர்வாகிகளும் அடுத்தடுத்து ராஜினாமா செய்து வருகின்றனர். கடந்த 8ல், திரிணமுல் காங்., ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்த சுகேந்து சேகர் ராய், எம்.பி., பதவியை ராஜினாமா செய்ததோடு, கட்சியில் இருந்தும் விலகினார்.
இந்நிலையில், திரிணமுல் காங்கிரசின் மற்றொரு ராஜ்யசபா எம்.பி.,யான சுஷ்மிதா தேவ், 53, நேற்று தன் பதவியை ராஜினாமா செய்ததோடு, கட்சியில் இருந்தும் விலகினார். ராஜினாமா செய்த சில மணி நேரங்களிலேயே, பா.ஜ.,வைச் சேர்ந்த அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மாவை, டில்லியில் உள்ள அவரது வீட்டில், சுஷ்மிதா தேவ் சந்தித்து பேசினார்.
இது குறித்து அவர் கூறுகையில், ''அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மாவை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். எனக்கு வழிகாட்ட அவரே சிறந்த நபர் என, கருதுகிறேன். அசாம் என் சொந்த மாநிலம். அங்கிருந்து மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்வேன்,'' என்றார்.
இதற்கிடையே, சுஷ்மிதா தேவின் ராஜினாமாவை துணை ஜனாதிபதியும், ராஜ்யசபா தலைவருமான சி.பி.ராதாகிருஷ்ணன் ஏற்றார்.
