வங்கதேச விவகாரத்தில் ஐ.நா.,வை நாட மத்திய அரசுக்கு மம்தா ஆலோசனை
வங்கதேச விவகாரத்தில் ஐ.நா.,வை நாட மத்திய அரசுக்கு மம்தா ஆலோசனை
ADDED : டிச 03, 2024 01:07 AM
கோல்கட்டா,
“வங்கதேசத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலை விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும். தேவைப்பட்டால், ஐ.நா.,வை நாடி, அந்த நாட்டுக்கு அமைதிப் படையை அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
போராட்டம்
நம் அண்டை நாடான வங்கதேசத்தில், இடஒதுக்கீடு பிரச்னை தொடர்பாக மாணவர்கள் நடத்திய போராட்டங்களில் வெடித்த வன்முறை தொடர்கிறது.
தற்போது அங்கு சிறுபான்மையினராக உள்ள ஹிந்துக்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.
மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி, மாநில சட்டசபை கூட்டத்தில் இதுகுறித்து நேற்று கூறியதாவது:
மேற்கு வங்கம், இந்தியாவின் ஒரு பகுதி. அண்டை நாடுகள் விவகாரத்தில் தலையிடவோ, அது தொடர்பாகவே பேசுவதற்கோ மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை.
நடவடிக்கை
அது மத்திய அரசின் பொறுப்பு. இருப்பினும், வங்கதேசத்தில் உள்ளவர்களின் உறவுகள் இங்கு உள்ளனர். வங்கதேசத்துக்கும், மேற்கு வங்கத்துக்கும் பல வகைகளில் தொடர்பு உள்ளது.
அந்த வகையில் சில கருத்துகளை தெரிவிக்க வேண்டியுள்ளது.
வங்கதேசத்தில் உள்ள இந்தியர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னையில் மத்திய அரசு தலையிட வேண்டும். தேவைப்பட்டால், இது தொடர்பாக ஐ.நா.,வில் முறையிட்டு, ஐ.நா., அமைதிப் படையை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பாதுகாப்பு மீறல்
வட கிழக்கு மாநிலமான திரிபுராவின் அகர்தலாவில் வங்கதேச துணை துாதரக அலுவலகம் உள்ளது. நேற்று ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் இங்கு போராட்டம் நடத்தினர்.
இவர்களில் சிலர், துாதரக அலுவலகத்துக்குள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்துக்கு மத்திய அரசு வருத்தம் தெரிவித்து உள்ளது.