நண்பரை கொன்று 14 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது
நண்பரை கொன்று 14 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது
ADDED : பிப் 12, 2025 07:05 AM
மல்லேஸ்வரம் : நண்பரை கொன்று பல இடங்களில் தலைமறைவாக இருந்தவர், 14 ஆண்டுகளுக்குப் பின் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரு, வயாலிகாவலை சேர்ந்தவர்கள் ஜான், 32, ராஜா, அருண், மணிகண்டன், சேத்தன். இவர்கள் அனைவரும் பேசிக் கொண்டிருந்தனர். இதில் ராஜாவுக்கும், சேத்தனுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. ராஜாவை சேத்தன் தாக்கினார். இதனால், அவரை பழிவாங்க ராஜா நினைத்தார். மற்ற நண்பர்களை தன்னுடன் சேர்த்துக் கொண்டார்.
கடந்த 2011ல் சம்பவத்தன்று, அனைவரும் மது அருந்தி உள்ளனர். குடிபோதையில் ஜானை பீர் பாட்டிலால் சேத்தன் தாக்கினார். கோபம் அடைந்த மற்றவர்கள், சேத்தனை கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு, தப்பியோடினர்.
ஆர்.டி.நகர் போலீசார், தலைமறைவாக இருந்த நான்கு பேரில் அருண், ராஜா, மணிகண்டன் ஆகியோரை கைது செய்தனர். ஜானை தேடி வந்தனர். கைதான மூவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். ஜான், தலைமறைவாக உள்ளதாக நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தனர்.
இதற்கிடையில் ஜாமினில் மூவரும் வெளியே வந்தனர். நீதிமன்ற விசாரணைக்கு ராஜா வராமல் டிமிக்கி கொடுத்தார். சமீபத்தில், ஆர்.டி., நகர் போலீசார், அவரை கைது செய்தனர்.
இந்த வழக்கில், தொடர்ந்து தலைமறைவாக இருந்த ஜானை, போலீசார் தீவிரமாக தேடினர். அவர் பெற்றோர், வயாலிகாவலில் இருப்பது தெரிய வந்தது. அங்கு சென்றபோது அவர் இல்லை. ஆதார் அடையாள அட்டையை வைத்து ஆய்வு செய்தபோது, பல தகவல்கள் தெரிய வந்தன. ஆந்திரா உட்பட பல இடங்களில் தேடினர்.
கடந்த வாரம் பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சப்ளையராக இருந்ததை அறிந்து, அவரை கைது செய்தனர். அப்போது, 'நான் அவன் இல்லை' என்று கூறி உள்ளார்.
போலீஸ் நிலையத்துக்கு அவரை அழைத்துச் சென்று விசாரித்தனர். உண்மையை ஒப்புக் கொண்டார். கொலை செய்த பின், திருப்பதிக்கு தப்பியோடிய அவர், அங்குள்ள ஹோட்டல் ஒன்றில் ஆறு ஆண்டுகளும், பெங்களூரு ஹொஸ்கோட்டில் ஏழு ஆண்டுகளும் வேலை செய்தது தெரிய வந்தது.
கொலை வழக்கில் 14 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவரை கைது செய்து, வழக்கை போலீசார் முடிவுக்கு கொண்டு வந்தனர்.