நாயை காரில் கட்டி 3.கி.மீ., இழுத்துச் சென்றவர் கைது மகனைப் பார்த்து குரைத்ததால் கொடூரச் செயல்
நாயை காரில் கட்டி 3.கி.மீ., இழுத்துச் சென்றவர் கைது மகனைப் பார்த்து குரைத்ததால் கொடூரச் செயல்
ADDED : ஏப் 19, 2025 10:19 PM
நொய்டா:தன் குழந்தையைப் பார்த்து குரைத்த நாயை, கார் பின் பகுதியில் கட்டி, 3 கி.மீ., தூரம் இழுத்துச் சென்றவர் கைது செய்யப்பட்டார்.
நொய்டா நை பஸ்தி பகுதியில் வசிப்பவர் ஷோபா ராணி. இவர், தான் வளர்க்கும் நான்கு வயதான 'ஜெர்மன் ஷெப்பர்ட்' நாயுடன், 15ம் தேதி காலை நடைப்பயிற்சி சென்றார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் அமித் என்பவரின் 10 வயது மகன் நாய் மீது கல்லை எறிந்தார். உடனே, அந்த நாய் சிறுவனைப் பார்த்து ஆக்ரோஷமாக குரைத்தது. பயந்த சிறுவன் ஓடும்போது தடுக்கி விழுந்தான். இதனால், அமித் கடும் ஆத்திரம் அடைந்தார். ஷோபா ராணியுடன் வாக்குவாதம் செய்த அமித், அந்த நாயை குச்சியால் சரமாரியாக தாக்கினார். நாய் அலறித் துடித்தது. அப்போதும் ஆத்திரம் அடங்காத அமித், தன் காரின் பின் பக்கத்தில் அந்த நாயைக் கட்டி 3 கி.மீ., தூரத்துக்கு அதிவேகமாக காரை ஓட்டிச் சென்றார். அந்த நாய் வாயில் நுரை தள்ள காரின் பின்னால் ஓடியது. சில இடங்களில் சாலையில் உரசி நாய் உடலில் பல இடங்களில் ரத்தம் வழிந்தது. ஆத்திரம் அடங்கியவுடன் மீண்டும் நாயின் உரிமையாளரான ராணியிடமே நாயை ஒப்படைத்தார்.
மயக்க நிலையில் இருந்த நாயை, கால்நடை டாக்டரிடம் கூட்டிச் சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர், நாய் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறினார். அதற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஷோபா ராணி கொடுத்த புகார்படி வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி, அமித்தை கைது செய்தனர். அவரது காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

