ADDED : நவ 09, 2024 11:11 PM

விதான் சவுதா: துணை முதல்வர் சிவகுமாரின் உதவியாளர், சிறப்பு அதிகாரி என்று கூறி, அரசு அதிகாரிகளை மிரட்டி பணம் பறித்தவர் கைது செய்யப்பட்டார்.
கர்நாடக தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் இன்ஜினியரிடம், சில தினங்களுக்கு முன்பு மர்ம நபர் ஒருவர் மொபைல் போனில் பேசினார்.
“தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பிரியங்க் கார்கேயின் தனிச்செயலர் பேசுகிறேன். உங்களை இடமாற்றம் செய்ய அமைச்சர் முடிவு செய்துள்ளார். இடமாற்றம் செய்யாமல் இருக்க இரண்டு லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும்,” என அவர் கூறியுள்ளார்.
இதை நம்பிய இன்ஜினியரும் 80,000 ரூபாயை முதல் தவணையாக அனுப்பினார்.
பின், தன்னிடம் பேசியது அமைச்சரின் தனிச்செயலர் இல்லை என்பது இன்ஜினியருக்கு தெரியவந்தது.
தன்னிடம் பணம் வாங்கியது குறித்து, அமைச்சரின் உண்மையான தனிச் செயலர் கவனத்திற்கு, இன்ஜினியர் கொண்டு சென்றார்.
அமைச்சர் பெயரை கூறி பணம் வசூலித்தவர் மீது, விதான் சவுதா போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரித்தனர்.
இதுதொடர்பாக துமகூரைச் சேர்ந்த ரகுநாத், 37, என்பவரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
விசாரணையில் துணை முதல்வர் சிவகுமாரின் தனிச்செயலர், சிறப்பு அதிகாரி என்று கூறி இடமாற்றம் செய்வதாக மிரட்டி, பல அதிகாரிகளிடம் பணம் வசூலித்ததும் தெரியவந்துள்ளது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.