ADDED : ஏப் 23, 2025 01:39 AM
புதுடில்லி:போக்குவரத்துப் பிரிவு சப் - இன்ஸ்பெக்டர் மீது, காரை மோதி விட்டு தப்பியவர் கைது செய்யப்பட்டார். காயம் அடைந்த சப் - இன்ஸ்பெக்டர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தென்மேற்கு டில்லி மஹிபால்பூர் சிக்னலில், மார்ச் 29ம் தேதி, போக்குவரத்துப்  பிரிவு சப் - இன்ஸ்பெக்டர் அரவிந்த் குமார் மற்றும் போலீசார் பணியில் இருந்தனர். அப்போது, அதிவேகமாக வந்த ஒரு கார், அரவிந்த் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. நிலைகுலைந்து விழுந்த அரவிந்த் குமாருக்கு முதுகெலும்பில் பலத்த காயம் ஏற்பட்டது. வலியால் துடித்த அவரை, சக போலீசார் மீட்டு, இந்திய முதுகெலும்பு சிகிச்சை மையத்தில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து, வசந்த் குஞ்ச் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், குற்றவாளியைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
சம்பவம் நடந்த பகுதியில் இருந்த கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன.
அரவிந்த் குமார் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற காரின் எண் கண்டுபிடிக்கப்பட்டது.
அதன் உரிமையாளருக்கு 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது.
இந்நிலையில், ஹரியானா மாநிலம் மேவாட் நகரைச் சேர்ந்த லியாகத் அலி,51, நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டார். அவரது கார் பறிமுதல் செய்யப்பட்டது.

