இளைஞர்களை கடத்தி மோசடியில் ஈடுபடுத்தியவர் கைது ;2,500 கி.மீ., துரத்தி பிடித்தது போலீஸ்
இளைஞர்களை கடத்தி மோசடியில் ஈடுபடுத்தியவர் கைது ;2,500 கி.மீ., துரத்தி பிடித்தது போலீஸ்
ADDED : டிச 09, 2024 03:41 AM

புதுடில்லி: வேலை தேடும் இளைஞர்களை குறிவைத்து அவர்களை வெளிநாட்டுக்கு கடத்தி, சைபர் குற்றங்களில் ஈடுபடுத்திய நபரை, டில்லி போலீசார் 2,500 கி.மீ., துரத்தி கைது செய்தனர்.
டில்லியைச் சேர்ந்த இளைஞர் நரேஷ் லகாவத், வேலை தேடி வந்தார். டில்லியில் உள்ள அலி இன்டர்நேஷனல் சர்வீஸ் என்ற வேலைவாய்ப்பு நிறுவனம், இவரை தாய்லாந்தில் பணி இருப்பதாக கூறி அனுப்பி வைத்தது.
அங்கு சென்றதும், இவரது பாஸ்போர்ட்டை பறித்து வைத்துக் கொண்ட நபர்கள், இந்தியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாட்டவர்களிடம் ஆன்லைனில் பணம் பறிக்கும் சைபர் குற்றத்தை செய்யும்படி கட்டாயப்படுத்தி உள்ளனர்.
போலி கால் சென்டர்
இதற்காக போலி கால் சென்டர்களை அவர்கள் நடத்தியுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பித்து நாடு திரும்பிய நரேஷ், நடந்த சம்பவம் குறித்து கடந்த மே 27ல் டில்லி போலீசில் புகார் அளித்தார். இந்த வழக்கு என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்பட்டது.
அவர்கள் இந்த குற்றத்தில் ஈடுபட்ட மன்சூர் ஆலம், சாஹில், ஆஷிஷ், பவன் யாதவ் மற்றும் ஹைதர் ஆகியோரை கைது செய்தனர்.
இவர்கள் ஐந்து பேரும் வெளிநாட்டு வேலை கனவுடன் உள்ள ஏழை இளைஞர்களை ஆசை வார்த்தை கூறி, கிழக்காசிய நாடான லாவோசுக்கு கடத்தி, சைபர் குற்றத்தில் ஈடுபடுத்தியது தெரிந்தது.
முக்கிய குற்றவாளி
அலி இன்டர்நேஷனல் சர்வீசஸ் நிறுவனத்தை நடத்திய கம்ரான் ஹைதர் என்பவர் இவர்களுக்கு உதவி வந்துள்ளார்.
முக்கிய குற்றவாளியான அவர் பல மாதங்களாக தலைமறைவாக இருந்தார். அவரைப்பற்றி குறித்து தகவல் தருவோருக்கு 2 லட்சம் ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டது.
அதன் பயனாக அவர் மஹாராஷ்டிராவில் இருப்பதாக டில்லி சிறப்பு பிரிவு போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீஸ் வருவதை அறிந்து அவர் மஹாராஷ்டிராவிலிருந்து, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானாவின் ஹைதராபாத் வரை சென்றார்.
போலீசாரும் விடாமல் 2,500 கி.மீ., அவரை பின் தொடர்ந்து, ஹைதராபாத் நம்பள்ளி ரயில் நிலையத்தில் வைத்து சமீபத்தில் கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகின்றனர்.