ரூ.100 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக குடும்பத்தினரை கொன்ற நபர் கைது
ரூ.100 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக குடும்பத்தினரை கொன்ற நபர் கைது
ADDED : அக் 07, 2025 02:33 AM

மீரட் : உத்தர பிரதேசத்தில், 100 கோடி ரூபாய் இன்சூரன்ஸ் தொகை பெறுவதற்காக பெற்றோர் மற்றும் மனைவியை கொன்று நாடகமாடிய நபரை போலீசார் கைது செய்தனர்.
உ.பி.,யின் மீரட்டை சேர்ந்தவர் விஷால் சிங்கால். இவரது தந்தை முகேஷ் சிங்கால். கடந்த, 2018 - 2023ம் கால கட்டத்தில், தந்தை முகேஷ் பெயரில், 50 கோடி ரூபாய் மதிப்பில், 64 இன்சூரன்ஸ் பாலிசிகளை அவரது மகன் விஷால் எடுத்தார்.
இவை அனைத்திற்கும், தன்னையே வாரிசுதாரராக பதிவு செய்து கொண்டார். கடந்த 2017ல், தாய் பிரபா தேவியுடன், விஷால் மோட்டார் சைக்கிளில் சென்ற போது, இருவரும் விபத்தில் சிக்கினர். இதில், பிரபா தேவி உயிரிழந்தார்.
சந்தேகம்
அடுத்ததாக, 2022ல் விஷாலின் மனைவி ஏக்தா மாரடைப்பால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே, விஷால் இரண்டு, மூன்று முறை திருமணம் செய்து கொண்டார்.
விலையுயர்ந்த கார்கள், புல்லட் உள்ளிட்டவற்றை வாங்கி குவித்தார். நான்காவதாக, ஷ்ரேயா என்பவரை கடந்தாண்டு பிப்ரவரியில் அவர் திருமணம் செய்தார். அவர் பெயரிலும் 3 கோடி ரூபாய்க்கு பாலிசி எடுத்து, வாரிசுதாரராக தன்னை நியமித்துக் கொண்டார்.
இந்த சூழலில், கடந்தாண்டு நடந்த சாலை விபத்தில் விஷாலின் தந்தை முகேஷ் உயிரிழந்தார்.
ரே குடும்பத்தில் அடுத்தடுத்து குடும்ப உறுப்பினர்கள், சாலை விபத்தில் உயிரிழந்ததும், சொத்துகள் வாங்கி குவிக்கப்பட்டதும் பலரது புருவங்களை உயர்த்தின.
அதேசமயம், இன்சூரன்ஸ் நிறுவனங்களின் பார்வையும் விஷால் மீது விழுந்தது. இந்நிலையில், தன் கணவர் விஷால் மீது மீரட் போலீசாரிடம் ஷ்ரேயா புகார் ஒன்றை சமீபத்தில் அளித்தார்.
அதில், 'இன்சூரன்ஸ் பாலிசி எடுக்கச் சொல்லி என் கணவர் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார். என் மாமனார் இறப்பதற்கு முன், பலமுறை என்னிடம் அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறினார்.
மோசடி
'இதையடுத்து, நான் என் பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டேன். அவர் குடும்பத்தில் அடுத்தடுத்து பலர் உயிரிழந்தது சந்தேகத்தை எழுப்புகிறது' என, தெரிவித்தார்.
இதையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில், விஷால், தன் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் 60க்கும் மேற்பட்ட பாலிசிகள் எடுத்து, 100 கோடி ரூபாய் இன்சூரன்ஸ் மோசடியில் ஈடுபட்டது வெளிச்சத்துக்கு வந்தது. தந்தை முகேஷ் மரணத்தில், விஷால் சொன்ன தகவல்களும், அவரின் இறப்பு சான்றிதழில் இருந்த விபரமும் முன்னுக்கு பின் முரணாக இருந்ததை அடுத்து, இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரிகள் போலீசார் உதவியுடன் விஷாலிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
இதில், பணத்துக்காக தன் குடும்ப உறுப்பினர்களை அவரே கொன்று, விபத்து போல் சித்தரித்தது அம்பலமானது. தாயார் மற்றும் முதல் மனைவியின் பெயரில், 50 கோடி ரூபாயை மோசடியாக பெற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து விஷால் கைது செய்யப்பட்டார்.