பிரிந்த மனைவியுடன் சேர உறவினரின் 5 வயது மகனை கொன்ற நபர் கைது
பிரிந்த மனைவியுடன் சேர உறவினரின் 5 வயது மகனை கொன்ற நபர் கைது
ADDED : ஜூலை 24, 2025 12:57 AM
அல்வர்: ராஜஸ்தானில், பிரிந்து சென்ற மனைவியை கட்டுப்படுத்தவும், அவருடன் சேர்ந்து வாழ வேண்டியும், மந்திரவாதியின் பேச்சைக்கேட்டு, உறவினரின் 5 வயது மகனை கொன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
ராஜஸ்தானின் அல்வர் மாவட்டத்தில் உள்ள சாரை கலன் பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ் பிரஜாபத். இவர், தன் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். மது உட்பட பல்வேறு போதைப்பொருள் பழக்கத்துக்கு அடிமையானதால், அவரை விட்டு மனைவி பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது.
பலமுறை சேர்ந்து வாழ வற்புறுத்தியும், மனைவி அவரது தாய் வீட்டிலேயே வசித்து வந்த சூழலில், மீண்டும் சேர்ந்து வாழ, கைத்ரால் - திஜாரா மாவட்டத்தைச் சேர்ந்த மந்திரவாதி சுனிலின் உதவியை மனோஜ் நாடினார்.
'மனைவியுடன் சேர்ந்து வாழ வேண்டுமென்றால், அவரின் சகோதரி மகன் அல்லது மகளை கொன்று காளிதேவிக்கு ரத்தத்தை கொடுக்க வேண்டும்' என, சுனில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, மிட்டாய் வாங்கி தருவதாக கூறி, மனைவியின் சகோதரி மகனான, 5 வயது லோகேஷை, அழைத்துச் சென்று அருகில் உள்ள ஆள் அரவமற்ற கட்டடத்தில் வைத்து மனோஜ் கழுத்தை நெரித்து கொன்றார். பின், அவரின் உடலில் இருந்து ஊசி வாயிலாக ரத்தத்தை எடுத்தார்.
இதற்கிடையே, சிறுவனை காணவில்லை என பெற்றோர் அளித்த புகாரின்பேரில், அவனை போலீசார் தேடி வந்தனர். மனோஜுடன் சிறுவன் கடைசியாக சென்றதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அவரை போலீசார் பின்தொடர்ந்தனர்.
துவக்கத்தில், தான் சிறுவனை தேடி வந்ததாக கூறி நடித்த பிரஜாபத், இறுதியில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர். கொலைக்கு காரணமாக இருந்த மந்திரவாதி சுனிலும் கைது செய்யப்பட்டார்.