துாக்க மாத்திரையில் விஷம் கலந்து மனைவியை கொன்றவர் கைது
துாக்க மாத்திரையில் விஷம் கலந்து மனைவியை கொன்றவர் கைது
ADDED : ஆக 20, 2025 02:37 AM
புதுடில்லி:தெற்கு டில்லியில், மனைவியின் நடத்தை மீதான சந்தேகத்தில், அந்த பெண்ணுக்கு துாக்க மாத்திரையில் விஷம் கலந்து கொடுத்து கொன்றவர், தன் கூட்டாளிகளுடன் போலீசில் சிக்கினார்.
ஷபாப் அலி என்ற பெயின்டர், தன் மனைவி, 30 வயதான இளம்பெண்ணை கொன்றதாக கைது செய்யப்பட்டுள்ளார். அவரின் கூட்டாளிகள் இருவரை போலீசார் பிடித்துள்ளனர். மற்றொருவரை தேடி வருகின்றனர். இதுகுறித்து, போலீசார் கூறியதாவது:
ஷபாப் அலிக்கு, தன் மனைவியின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டது. அந்த தம்பதிக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில், மனைவியை கொல்ல, அலி முடிவு செய்தார்.
இதற்காக, பீஹாரின் அராரியா மாவட்டத்தை சேர்ந்த மற்றொரு பெயின்டரான தன்வீர் கான், 25, மற்றும் டில்லி அருகே உள்ள சந்தன்ஹோல்லா என்ற இடத்தை சேர்ந்த ஷாருக் கான், 28, என்ற எலக்ட்ரீஷியன் உதவியை அவர் நாடினார்.
அவர்கள் மூவரும் சேர்ந்து, அந்த பெண்ணுக்கு, கடந்த, 2ம் தேதி நள்ளிரவில், துாக்க மாத்திரையுடன், பூச்சிக்கொல்லி மருந்து தடவி கொடுத்தனர். அதை வழக்கமான மாத்திரை என்று கருதி, அதை சாப்பிட்ட பெண் சிறிது நேரத்தில் இறந்தார்.
அவரின் உடலை எடுத்துச் சென்று, சந்தன்ஹோல்லா பகுதியில் உள்ள இடுகாட்டில் புதைத்து, தப்பினர்.
இதற்கிடையே, அந்த பெண்ணை காணவில்லை என போலீசில், கடந்த, 10ம் தேதி புகார் கொடுத்தனர். புகாரின் படி, போலீசார் மேற்கொண்ட விசாரணையில், இறந்த அந்த பெண் உடலுடன் மூவரும் சந்தன்ஹோல்லா இடுகாட்டிற்கு காரில் சென்றது தெரிந்தது.
அதையடுத்து, ஷபாப் அலியிடம் மேற்கொண்ட விசாரணையில், உண்மையை அவர் ஒப்புக் கொண்டார். நடத்தை மீது சந்தேகம் அடைந்து, மனைவியை கொன்றதாக வாக்கு மூலம் அளித்தார்.
அதையடுத்து, புதைக்கப்பட்ட அந்த பெண்ணின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு, பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
அவர் அளித்த தகவலின் படி, அவருக்கு உதவிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். நாலாவது நபரை தேடி வருகிறோம்.
இவ்வாறு போலீசார் கூறினர்.