ADDED : ஜன 25, 2025 01:43 AM
திருவனந்தபுரம்:கணவர், குழந்தையை பிரிந்து தன்னுடன் வர மறுத்த பெண்ணை கொலை செய்த, இன்ஸ்டாகிராம் சமூகவலைதள நண்பரை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே கழக்கூட்டம் கடினம் குளத்தை சேர்ந்தவர் ராஜிவ், கோவில் பூஜாரி. இவரது மனைவி ஆதிரா, 30. இவர்களுக்கு, 7 வயதில் மகன் உள்ளார்.
ஆதிரா இரண்டு நாட்களுக்கு முன் வீட்டில் கழுத்து அறுக்கப்பட்டு இறந்து கிடந்தார். ஆதிராவின் டூ - வீலர் ரயில் நிலையம் அருகே நின்றது.
விசாரணையில், கொல்லம் மாவட்டம், தவளபுரத்தைச் சேர்ந்த ஜான்சன், 38, ஆதிராவை கொலை செய்தது தெரிந்தது. இன்ஸ்டாகிராம் சமூகவலைதளத்தில்ஐந்து ஆண்டுகளாக இருவரும் பழகினர்.
கடந்த ஆண்டு நெருக்கமாகியுள்ளனர். கணவர், மகனை பிரிந்து தன்னுடன்வரும்படி ஜான்சன் வற்புறுத்தினார்; ஆதிரா மறுப்பு தெரிவித்தார். தொடர்ந்து, ஆதிராவை மிரட்டி, சிறிது, சிறிதாக 1.30 லட்சம் ரூபாய் வரை பெற்றார்.
இந்நிலையில் தான் ஆதிரா வீட்டுக்கு வந்த ஜான்சன் தகராறில் ஈடுபட்டு, அவரை கொலை செய்தது விசாரணையில் தெரிந்தது.
கோட்டயம் காளைப்பட்டி என்ற இடத்தில் பதுங்கியிருந்த ஜான்சனை போலீசார் சுற்றி வளைத்த போது, எலி மருந்து குடித்து தற்கொலை செய்ய முயன்றார். அவரை மீட்டு கோட்டயம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ஜான்சனுக்கு திருமணமாகி ஐந்து ஆண்டுகளுக்கு முன், மனைவியை விவாகரத்து செய்து, தனியாக வாழ்ந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

