ADDED : ஜன 03, 2025 10:48 PM
புதுடில்லி:ரஷ்ய நாட்டுக்குச் செல்ல 4 நேபாளிகளுக்கு போலி சான்றிதழ் தயாரித்துக் கொடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
டில்லி மாநகரப் போலீசின், விமான நிலைய துணை கமிஷனர் உஷா ரங்னானி கூறியதாவது.
நேபாள நாட்டைச் சேர்ந்த ராஜ்மணி சவுத்ரி,27, ஜெய்சிங் மஹதோ,43, அனில் மஹதோ,28, பிரதிக்யா மஹார்,28, ஆகிய நான்கு பேரும், டிச. 30ம் தேதி ரஷ்ய நாட்டின் மாஸ்கோ நகருக்குச் செல்லும் விமானத்தில் பயணிக்க, விமான நிலையத்துக்கு வந்தனர்.
பயண ஆவணங்களை ஆய்வு செய்தபோது, நேபாள தூதரகம் வழங்கியிருந்த என்.ஓ.சி., எனப்படும் தடையில்லா சான்றிதழ் போலி என்பது தெரிந்தது.
விசாரணையில், நான்கு பேரும் தலா 9 லட்சம் ரூபாயை, பயண ஏஜென்ட்டுகளான ரோஹித் சவுத்ரி மற்றும் தினேஷ் சர்மா ஆகியோர், ரஷ்யாவில் வேலைக்கான ஆர்டர் விசா மற்றும் என்.ஓ.சி., ஆகியவற்றை வாங்கிக் கொடுத்ததாக கூறினர்.
வழக்குப் பதிவு செய்து, தினேஷ் ஷர்மா கைது செய்யப்பட்டுள்ளார். ரோஹித் சர்மாவை போலீசார் தேடுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

