ADDED : நவ 23, 2024 08:44 AM

பாகல்கோட் : கர்நாடகாவில், 'ஹேர் டிரையரில்' டெட்டனேட்டர் பொருத்தி பெண்ணை கொல்ல முயன்றவர் கைது செய்யப்பட்டார்.
கர்நாடக மாநிலம், பாகல்கோட் மாவட்டம் இளகல்லில் வசிப்பவர் பசம்மா, 35. இவரது கணவர், ராணுவத்தில் பணியாற்றும்போது இறந்து விட்டதால், பசம்மா தனியாக வசிக்கிறார்.
இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் சசிகலா. இருவரும் தோழியர். சில நாட்களுக்கு முன், சசிகலாவுக்கு கூரியரில் பார்சல் வந்தது; அவர் வீட்டில் இல்லை.
கூரியர் நிறுவன ஊழியர், மொபைல் போனில் சசிகலாவை தொடர்பு கொண்டபோது, 'நான் ஆன்லைனில் எந்த பொருளையும் ஆர்டர் செய்யவில்லை' என்றார்.
பார்சலில் அவரது வீட்டு முகவரி, மொபைல் எண் இருந்தது; பணமும் செலுத்தப்பட்டிருந்தது.
இதனால், பக்கத்து வீட்டில் தன் தோழி பசம்மாவிடம், பார்சலை கொடுக்கும்படி சசிகலா கூறியுள்ளார்.
பார்சலை வாங்கிய பசம்மா பிரித்து பார்த்ததில், 'ஹேர் டிரையர்' இருந்தது. அதன் ஒயரை பிளக்கில் செருகி, 'ஆன்' செய்தபோது திடீரென வெடித்து சிதறியது. இதில், பசம்மாவின் இரண்டு கைகளும் சிதைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து விசாரணை நடத்திய இளகல் போலீசார் கூறியதாவது:
இளகல்லில் வசிப்பவர் சித்தப்பா ஷிலவந்தா, 35. இவர், மறைந்த ராணுவ வீரரின் மனைவி பசம்மாவை, ஒருதலையாக காதலித்தார். தன் காதலை ஏற்கும்படி அவருக்கு தொல்லை கொடுத்தார். இதை சசிகலா கண்டித்தார்.
தன் காதலுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் சசிகலாவை கொலை செய்ய, ஷிலவந்தா திட்டம் தீட்டினார். ஹேர் டிரையரில் டெட்டனேட்டர் பொருத்தி, கூரியரில் சசிகலா வீட்டுக்கு அனுப்பினார். ஆனால், தவறுதலாக பசம்மா கையில் அது கிடைத்து, அவர் காயமடைந்தார்.
பார்சல் அனுப்பியது யார் என, கூரியர் நிறுவனத்தில் விசாரித்தபோது, ஷிலவந்தா என்பது தெரிந்தது. சசிகலாவை கொலை செய்ய ஹேர் டிரையரில், டெட்டனேட்டர் வைத்ததை ஒப்புக் கொண்டார். அவரை நேற்று கைது செய்தோம்.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.