தந்தையின் கண்ணெதிரே மகளுக்கு 'முத்தலாக்' கூறியவர் கைது
தந்தையின் கண்ணெதிரே மகளுக்கு 'முத்தலாக்' கூறியவர் கைது
ADDED : நவ 23, 2024 10:58 PM
மங்களூரு: தந்தையின் கண் முன்னே மகளுக்கு முத்தலாக் கூறிய நபரை மகளிர் போலீசார் கைது செய்தனர்.
தட்சிணகன்னடா மாவட்டம், மங்களூரின் உல்லாள் சம்மர் சேண்ட் அருகில் வசிப்பவர் முகமது தில்வாஜ், 32. இவரது மனைவி ஹீனா பாத்திமா, 27.
இவர்களுக்கு 2019ல் திருமணம் ஆனது. திருமணத்தின்போது, ஹீனா பாத்திமாவின் பெற்றோர், 22 சவரன் தங்க நகைகள் கொடுத்தனர்.
தவிர முகமது தில்வாஜ், கைக்கடிகாரம் வாங்கிக் கொள்ள, 50,000 ரூபாய் கொடுத்தனர்.
திருமணமான புதிதில் தம்பதி அன்யோன்யமாக இருந்தனர். தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், வேறு பெண்களுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதால் முகமது தில்வாஜின் குணம் மாறியது.
இதுகுறித்து கேள்வி எழுப்பிய மனைவியை கடுமையாக தாக்கினார். காயமடைந்த அவர் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார்.
அதன்பின் இரண்டு குடும்பத்தின் மூத்தவர்கள், சமாதானம் செய்து முகமது தில்வாஜுக்கு புத்திமதி கூறினார். ஆனாலும் அவரது போக்கு மாறவில்லை.
கூடுதல் வரதட்சணை பணம் கேட்டு துன்புறுத்தினார். நவம்பர் 8ம் தேதி, ஹீனா பாத்திமாவின் தந்தை சபீல் அகமது, மருமகன் முகமது தில்வாஜின் செயலை கண்டித்தார்.
கோபமடைந்த அவர், மனைவியை தாக்கினார். அது மட்டுமின்றி மாமனாரை, தன் வீட்டுக்கு வரவழைத்து அவரது கண் எதிரில், மனைவிக்கு 'முத்தலாக்' கூறினார். அத்துடன் வீட்டில் இருந்து அவரை வெளியே தள்ளினார்.
இதுதொடர்பாக, மங்களூரு மகளிர் போலீஸ் நிலையத்தில் ஹீனா பாத்திமா குடும்பத்தினர் புகார் அளித்தனர். வழக்குப் பதிவு செய்த போலீசார், முகமது தில்வாஜை நேற்று கைது செய்தனர்.