ADDED : ஆக 23, 2025 01:28 AM

புதுடில்லி:முதல்வர் ரேகா குப்தா மீது நேற்று முன் தினம் தாக்குதல் நடந்த நிலையில், காந்தி நகரில் நடந்த நிகழ்ச்சியில், முதல்வருக்கு எதிராக கோஷமிட்டவர் கைது செய்யப்பட்டார்.
புதுடில்லி காந்தி நகரில், 'வாஸ்த்ரிகா' ஆடை கண்காட்சியை முதல்வர் ரேகா குப்தா நேற்று துவக்கி வைத்தார்.
அப்போது, யமுனா பார் விகாஸ் வாரியத் தலைவராக பா.ஜ., - எம்.எல்.ஏ., அரவிந்தர் சிங் லவ்லி அறிவிக்கப்பட்டார்.
முதல்வர் பேசிக் கொண்டு இருக்கும்போது, முதல்வருக்கு எதிராக ஒருவர் கோஷமிட்டார்.
போலீசார் உடனடியாக அவரை கூட்டத்தில் இருந்து வெளியேற்றி, கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடக்கிறது.
புதுடில்லி சிவில் லைன்ஸில் உள்ள முகாம் அலுவலகத்தில், 19ம் தேதி பொதுமக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டுக் கொண்டிருந்த முதல்வர் ரேகா குப்தா மீது, குஜராத் மாநிலம் ராஜ்கோட்டை சேர்ந்த ராஜேஷ்பாய் என்பவர் தாக்குதல் நடத்தினார்.
கிரண்பேடி பாராட்டு முதல்வர் ரேகா குப்தா, முகாம் அலுவலகத்தில் 19ம் தேதி தான் தாக்கப்பட்டதை தொடர்ந்து, முகாம் அலுவலகத்தில் மட்டுமின்றி, அனைத்து சட்டசபைத் தொகுதியிலும் ஜன் சன்வாய் நிகழ்ச்சி நடத்தப்படும் என முதல்வர் ரேகா குப்தா நேற்று முன் தினம் அறிவித்தார்.
இதுகுறித்து, ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரியும், புதுச்சேரி முன்னாள் கவர்னருமான கிரண் பேடி, டில்லியில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
பொதுமக்களிடம் நேரடியாக குறைகளைக் கேட்கும், 'ஜன் சன்வாய்' திட்டத்தில் எம்.எல்.ஏ.,க்கள், கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகளும் மனமுவந்து செயல்பட்டால் அரசு நிர்வாகத்தில் நல்ல மாற்றம் ஏற்படும். இது, டில்லி முதல்வர் ரேகா குப்தாவின் நேர்மறையான அணுகுமுறை. தாக்குதல் சம்பவத்துக்கு தன் அணுகுமுறையால் நல்ல பதில் அளித்துள்ளார்.
தேர்தல் நேரத்தில் ஓட்டுக் கேட்கச் செல்லும் தலைவர்கள், பதவிக்கு வந்த பின், மக்களைச் சந்திப்பதை தவிர்க்கக் கூடாது. முதல்வரின் வேண்டுகோளை ஏற்று எம்.எல்.ஏ.க்கள் மற்றும் டில்லி மாநகராட்சி கவுன்சிலர்கள் குறிப்பிட்ட நேரத்தில் மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்க வேண்டும்.
அரசின் உயர் அதிகாரிகளும் மக்களைச் சந்திக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.