பாம்பை வைத்து மிரட்டி சிறுமியை பலாத்காரம் செய்தவர் கைது
பாம்பை வைத்து மிரட்டி சிறுமியை பலாத்காரம் செய்தவர் கைது
ADDED : மே 23, 2025 12:42 AM
கோட்டா: வீட்டில் வளர்த்த நாகப்பாம்பை காட்டி மிரட்டி, சிறுமி உட்பட பல்வேறு பெண்களை பலாத்காரம் செய்த நபரை, ராஜஸ்தான் போலீசார் நேற்று கைது செய்தனர்.
உத்தர பிரதேசத்தின் ஜான்சி நகரில் வாடகை வீட்டில் முகமது இம்ரான், 29, என்பவர் மனைவியுடன் வசித்து வந்தார். அவர் மீது, அப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் போலீசில் புகாரளித்தார்.
அதில், 'என் உறவுக்கார சிறுமியை பலாத்காரம் செய்த முகமது இம்ரான், அது தொடர்பான வீடியோக்களை வைத்து தொடர்ந்து மிரட்டி வருகிறார்.
'வீட்டில் வளர்க்கும் நாகப்பாம்பை காட்டி மிரட்டி பல பெண்களை அவர் நாசமாக்கி உள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, தலைமறைவான முகமது இம்ரான், ராஜஸ்தானில் உள்ள சொந்த ஊரான கோட்டாவுக்கு சென்றார். ஜான்சி நகர போலீசார் அளித்த புகாரை தொடர்ந்து, கோட்டா போலீசார், முகமது இம்ரான் வீட்டில் சோதனை செய்தனர்.
அவரை கைது செய்ததுடன், வீட்டில் சட்ட விரோதமாக வளர்த்து வந்த நாகப்பாம்பு மற்றும் 7.20 லட்சம் மதிப்புள்ள போலி ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்தனர். முகமது இம்ரான் மீதும், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி அஸ்மீன் மீதும் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது.