பேஸ்புக்கில் பகிரங்க மிரட்டல் விடுத்து பா.ஜ., நிர்வாகியை சுட்டுக்கொன்றவர் கைது
பேஸ்புக்கில் பகிரங்க மிரட்டல் விடுத்து பா.ஜ., நிர்வாகியை சுட்டுக்கொன்றவர் கைது
ADDED : மார் 22, 2025 05:02 AM

கண்ணுார் : கேரளாவில், கட்டுமான ஒப்பந்ததாரர் ஒருவர் வீடு கட்டும் பிரச்னையில் பா.ஜ., நிர்வாகியை சுடப்போவதாக பேஸ்புக்கில் அறிவித்துவிட்டு, சில மணி நேரங்களில் அவரை சுட்டுக்கொன்ற சம்பவம் நடந்துள்ளது.
கேரள மாநிலம், கண்ணுார் மாவட்டம், புனியன்கோடு பகுதியைச் சேர்ந்தவர் பா.ஜ., நிர்வாகி ராதாகிருஷ்ணன், 51. இவர் சரக்கு வாகன ஓட்டுநராக இருந்தார்.
புகைப்படம்
இவருக்கும், கட்டுமான ஒப்பந்ததாரர் சந்தோஷ் என்பவருக்கும் வீடு கட்டுவது தொடர்பாக பிரச்னை இருந்து வந்துள்ளது. சந்தோஷ் மீது, ராதாகிருஷ்ணன் போலீசிலும் புகார் அளித்துள்ளார்.
கேரளாவில் வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களின் பாதுகாப்புக்காக ஒவ்வொரு கிராமத்திலும் காட்டுப்பன்றிகளை சுடுவதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவுக்கு அரசு சார்பில் துப்பாக்கியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் சந்தோஷும் இடம் பெற்றிருந்தார்.
இந்நிலையில், நேற்று மதியம் அந்த துப்பாக்கியை வைத்து குறி பார்ப்பது போல் புகைப்படம் எடுத்து, 'இலக்கை வீழ்த்த வேண்டிய வேலை வந்து விட்டது' என்று பேஸ்புக்கில் பதிவிட்டார்.
அதன்பின் மாலையில், ராதாகிருஷ்ணன் புதிதாக கட்டியுள்ள வீட்டிற்கு சென்று, அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடினார். முதலில் அக்கம் பக்கத்தினர் பட்டாசு வெடிப்பதாக நினைத்தனர்.
ஆனால், வீட்டின் உள்ளே இருந்து ராதாகிருஷ்ணனின் மகன் கதறியபடி வெளியே ஓடி வந்து கூச்சல் போட்டதை பார்த்து, சுற்றியுள்ளவர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர்.
கைது
அங்கு, ராதாகிருஷ்ணன் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து கிடந்தார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்தில் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர். அங்கு ஒரு வீட்டில் பதுங்கியிருந்த சந்தோஷை கைது செய்தனர். அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.